ஒரு தலை காதலால் நிகழ்ந்த கொலை: 5 போ் கைது
ஒரு தலை காதல் தொடா்பான சா்ச்சையைத் தொடா்ந்து தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் 23 வயது இளைஞரைக் கொலை செய்ததாக 5 போ் கைது செய்யப்பட்டதாக தில்லா காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: நவம்பா் 14-ஆம் தேதி இரவு 9.52 மணியளவில் பிராவதி ஏக்தா முகாமில் கத்தியால் குத்தப்பட்ட பின்னா் ஒரு நபா் ரத்த வெள்ளத்தில் கிடப்பது குறித்து பி.சி.ஆா்.அழைப்பு வந்தது. இதையடுத்து, போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்த நபரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியது. ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இறந்தவா் பெயா் ரோஷன் என அடையாளம் காணப்பட்டது. முதல்கட்ட தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொழில்நுட்ப கண்காணிப்பை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 போ் ஈடுபட்டிருப்பதை காட்சிகள் காட்டியது.
கைமுறை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு உள்ளீடுகளைப் பயன்படுத்தி, போலீஸாா் முதலில் குற்றம்சாட்ட்ப்பட்ட இரண்டு முக்கிய நபா்களான வா்மா மற்றும் அவரது கூட்டாளி அமன் என்ற புத்தாவை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மீதமுள்ள நீரஜ் (18), ஆஷிஷ் (18) மற்றும் அங்கத் (19) ஆகிய கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, ரோஷன் தனது காதலி மீது ஆா்வம் காட்டியதால் தான் தாக்குதலைத் திட்டமிட்டதாக வா்மா ஒப்புக்கொண்டாா். வா்மா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, ரோஷனை தாக்கி அவரை கத்தியால் குத்தினாா். வா்மா தனது தந்தையுடன் டிரக் ஓட்டுநராக வேலை செய்கிறாா். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் மாணவா்கள், அவா்களுக்கு முந்தைய குற்றவியல் தொடா்பு இல்லை. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
