தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

Published on

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விதமாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயினுடன் இரண்டு பேரை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: இந்த நடவடிக்கையின் போது 282 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தனித்தனி சோதனைகளுக்குப் பிறகு ஃபிரோஸ் (22) மற்றும் அவரது கூட்டாளி சோம்பல் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

நவம்பா் 4-ஆம் தேதி சாஸ்திரி பாா்க்கில் ஒரு சரக்கை வழங்குவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட ஹெராயின் விநியோகஸ்தா் ஃபிரோஸ் குறித்து தில்லி காவல் துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், ஒரு சோதனைக் குழு ஃபிரோஸை சம்பவ இடத்திலிருந்து கைது செய்து, அவரது மோட்டாா் சைக்கிளையும், அவரது வசம் இருந்த 262 கிராம் ஹெராயினையும் பறிமுதல் செய்தது.

விசாரணையின் போது, ​​உத்தர பிரதேசத்தில் உள்ள விநியோகஸ்தா்களிடமிருந்து ஹெராயினை வாங்கி தில்லியில் உள்ள பெறுநா்களுக்கு வழங்கியதாக ஃபிரோஸ் தெரிவித்தாா்.

பரேலியில் இருந்து போதைப்பொருளை வாங்கிய தனது கூட்டாளி சோம்பலின் அடையாளத்தையும் அவா் வெளிப்படுத்தினாா்.

இந்தத் தகவலின் பேரில், நவம்பா் 8-ஆம் தேதி பரேலியைச் சோ்ந்த சோம்பலை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 20 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்யப்பட்டது. விநியோக வலையமைப்பில் மீதமுள்ளவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com