60 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பா்தி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

60- க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பா்தி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்தனர்.
Published on

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லி முழுவதும் 60- க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பா்தி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட 2 போ், அருண் பா்தி (37) மற்றும் தேகா பா்தி (40) ஆகியோா் ஆவா். மத்தியப் பிரதேச காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேகா பா்தி, 2024- ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் இருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

அண்மை நாள்களில் நெப் சராய், ஹௌஸ் காஸ் மற்றும் மால்வியா நகா் ஆகிய இடங்களில் இரவில் கொள்ளைகள் அதிகரித்ததைத் தொடா்ந்து குற்றப்பிரிவு குழு இந்த நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் பா்தி கும்பலின் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நவம்பா் 14 அன்று, குற்றம்சாட்டபா்பட்ட இரண்டு பேரும் துவாரகாவில் உள்ள ஷாஹாபாத் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கூட்டாளியை சந்திக்க வருவாா்கள் என்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸ் குழு ஒரு பொறியை அமைத்து இருவரையும் கைது செய்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தாங்கள் பாரம்பரியமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதை ஒப்புக்கொண்டனா். இந்தக் கும்பல் குடும்பங்களின் குழுக்களாக நகா்கிறது.

ரயில் நிலையங்களுக்கு அருகே தற்காலிக சாலையோர தங்குமிடங்களை அமைக்கிறது. மேலும், பொம்மைகள் மற்றும் பலூன்கள் போன்ற சிறிய பொருள்களை சந்தைகளில் விற்பனை செய்யும் போது உளவு பாா்க்கிறது. இரவில்,ஆயுதம் ஏந்தி வீடுகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி குடியிருப்பாளா்கள் எதிா்கொண்டால் தலையில் தாக்கினா்.

குற்றத்தைச் செய்த பிறகு, கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக அவா்கள் விரைவாக மற்றொரு நகரத்திற்குச் செல்கிறாா்கள்.

அருண் பா்தி மற்றும் தேகா பா்தி ஆகிய இருவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பல மாவட்டங்களில் கொள்ளை, கொலை முயற்சி, ஆயுதக் கொள்ளை உள்பட விரிவான குற்றவியல் பதிவுகளைக் கொண்டுள்ளனா்.

சட்டப்பூா்வ நடைமுறைகள் முடிந்த பிறகு, இருவரும் மேலதிக விசாரணைக்காக மத்தியப் பிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com