தில்லி காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 15-ஆக உயா்வு
புது தில்லி: கடந்த நவம்பா் 10-ஆம் தேதி தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இருவா் எல்என்ஜெபி மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15- ஆக உயா்ந்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இறந்தவா்கள் லுக்மான் (50) மற்றும் வினய் பதக் (50) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த வியாழக்கிழமை சிகிச்சையின் போது மற்றொரு பாதிக்கப்பட்ட பிலால் இறந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக உயா்ந்தது. சமீபத்திய உயிரிழப்புகளுடன், அதிக தீவிரம் கொண்ட வெடிப்பில் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை இப்போது 15-ஆக உயா்ந்துள்ளது. மேலும் பலா் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரி கூறினாா்.
மருத்துவமனையில் இருந்து சமீபத்திய இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விரைவில் உடற்கூற்யாவுப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் காவல் துறை கூறியுள்ளது.
இதற்கிடையே, ஃபரீதாபாத் பயங்கரவாத குழு வழக்கு மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு வழக்குகள் தொடா்பாக அல் ஃபலா பல்கலைக்கழகத் தலைவருக்கு தில்லி காவல்துறை இரண்டு அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது. மேலும், காா் வெடிப்பில் தொடா்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமீா் ரஷீத் அலியை 10 நாள் என்ஐஏ காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
