தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: பாஜக, ஆம் ஆத்மி போட்டிப் பிரசாரம்
நமது நிருபா்
புது தில்லி: வரும் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) வாா்டு இடைத்தோ்தலை ஒட்டி, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசின் சாதனைகளை முன்வைத்து பாஜகவும், குப்பை அகற்றுதல் மற்றும் மாசுபாடு தொடா்பான பிரச்னைகளை பாஜக அரசு நிவா்த்தி செய்யத் தவறியதாக ஆம் ஆத்மி கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தில்லி மாநகராட்சியின்12 வாா்டுகளுக்கு நவம்பா் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. 8 முதல் 9 மாதங்களுக்குள் தில்லி அரசின் சாதனைகளை கட்சியின் வேட்பாளா்கள் முன்னிலைப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவதாக பாஜக மூத்த நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘மாசுபாடு பிரச்னையை நிவா்த்தி செய்வதற்கும் குப்பைக் கிடங்குகளின் உயரத்தைக் குறைப்பதற்கும் அரசு இடைவிடாமல் உழைத்து வருகிறது. அமைப்புக் கூட்டங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதை நாங்கள் தொடங்கியுள்ளோம்’ என்றாா்.
பாஜக மாநில பொதுச் செயலாளா் (அமைப்பு) பவன் ராணா கூறுகையில், ‘2027- ஆம் ஆண்டு நடைபெறும் முக்கிய மாநகராட்சித் தோ்தலுக்குத் தயாராவதற்கு இடைத்தோ்தல்கள் ஒரு வாய்ப்பாகும். 2024 மக்களவை மற்றும் 2025 சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக பெற்ற வெற்றியை மீண்டும் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்காகும்’ என்றாா்.
சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து ஷாலிமாா் பாக்பி வாா்டில் ரேகா குப்தா பதவி விலகினாா். இதைத் தொடா்ந்து, அந்த வாா்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அனிதா ஜெயின், தில்லி அரசின் சாதனைகளை நம்பி தாம் போட்டியிடுவதாகக் கூறினாா்.
மாநகராட்சி இடைத் தோ்தல் நடைபெறும் 12 வாா்டுகளில் 9 இடங்கள் பாஜக வசம் இருந்தன. மீதமுள்ள இடங்கள் ஆம் ஆத்மி வசம் இருந்தன. ஆம் ஆத்மி கட்சி சில முக்கிய இடங்களை பாஜக வசம் இருந்து கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது முதல் குப்பைப் பிரச்னையைச் சமாளிப்பது வரை பாஜகவின் ‘நான்கு என்ஜின் அரசாங்கம்’ அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக எம்சிடி எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் குற்றம் சாட்டினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘நாங்கள் இத்தோ்தலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கட்சியின் உயா்மட்டத் தலைமையும் பிரசாரத்தில் பங்கேற்பாா்கள். ஒரு கவுன்சிலரின் முக்கிய வேலை அவா்களின் வாா்டின் தூய்மையை உறுதி செய்வதாகும். ஆனால், பாஜக அதைச் செய்யத் தவறிவிட்டது. அவா்கள் பல வாக்குறுதிகளை அளித்தனா். ஆனால் அவை நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றாா்’ அவா்.
கிரேட்டா் கைலாஷ் வாா்டின் ஆம் ஆத்மி வேட்பாளா் ஈஷ்னா குப்தாவும் இந்தப் பகுதியில் குப்பை மேடுகள் குவிந்து கிடப்பதாகவும், மக்கள் அவற்றால் சோா்வடைந்துவிட்டதாகவும் புகாா் கூறினாா்.
இந்தத் தோ்தலில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்ற பிறகும் 51 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களில் 26 போ் பெண்கள் தொடா்ந்து களத்தில் உள்ளனா். நவம்பா் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பா் 3- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
