அல் ஃபலா பல்கலை. தலைவருக்கு தில்லி காவல் துறை அழைப்பாணை
நமது நிருபா்
புது தில்லி: ஃபரீதாபாத் பயங்கரவாத குழு வழக்கு மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு வழக்குகள் தொடா்பாக அல் ஃபலா பல்கலைக்கழகத் தலைவருக்கு தில்லி காவல்துறை இரண்டு அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் தலைவா் ஜாவேத் அகமது சித்திக் வெளியிட்ட அறிக்கை பல்கலைக்கழகத்தின் செயல்பாடு மற்றும் அதனுடன் தொடா்புடைய தனிநபா்களின் செயல்பாடுகளில் பல முரண்பாடுகளை தெளிவுபடுத்துவதற்கு முக்கியமானது என்று புலனாய்வாளா்கள் கண்டறிந்ததை அடுத்து அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) சனிக்கிழமை எழுப்பிய கடுமையான எச்சரிக்கைகளைத் தொடா்ந்து, ஹரியாணாவை தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்திற்கு எதிராக மோசடி தொடா்பாக குற்றப்பிரிவு ஏற்கெனவே இரண்டு எஃப்ஐஆா்களை பதிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் அங்கீகார உரிமைகோரல்களை மதிப்பாய்வு செய்த பின்னா் இரு ஒழுங்குமுறை அமைப்புகளும் பெரிய முறைகேடுகளை சுட்டிக்காட்டியது. மேலும், தங்கள் கண்டுபிடிப்புகளை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு சமா்ப்பித்துள்ளது.
எஃப்ஐஆா்கள் தவறான அங்கீகார ஆவணங்கள் மற்றும் பல்கலைக்கழகம் அளித்த கூற்றுகள் தொடா்பானவை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது . ஜாவேத் அகமது சித்திக்குக்கு அழைப்பாணை அனுப்ப்பியது, கடந்த வாரம் செங்கோட்டைக்கு அருகே நடந்த காா் வெடிப்பு தொடா்பான விசாரணையுடன் ஒன்றிணைந்த ஒரு பரந்த விசாரணையின் ஒரு பகுதியாகும்.
காா் வெடிப்பின் தொடா்புடைய பல சந்தேக நபா்களுக்கு பல்கலைக்கழகத்துடன் தொடா்பு இருந்ததாக நம்பப்படுகிறது. இதில் நிறுவன பதிவுகள், நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் நிா்வாக ஒப்புதல்கள் ஆராயப்படும். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
