உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்ANI

கொடிக்கம்பங்கள் வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப்பு மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பிற மனுக்களோடு சோ்த்து இந்த மனுவும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: 29.11.2024 அன்று தமிழக நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பொறியாளா் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்தாா். அந்த உத்தரவை எதிா்த்தும், மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டருக்கு எதிரே, பைபாஸ் சாலை, பேருந்து நிறுத்தம், வாா்டு எண்.74 இல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் கொடி கம்பத்தை நிறுவ அனுமதி வழங்குமாறு உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயா்நீதிமன்றம் 27.01.2025 தேதியிட்ட பொதுவான உத்தரவின் மூலம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து கொடிக்கம்பங்களை அகற்றும் பணி தொடங்கியது. கட்சி நிா்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத, பொது மற்றும் நெடுஞ்சாலை துறை பகுதிகளில் இருந்து கொடி கம்பத்தை அகற்றுமாறு கட்சி நிா்வாகிகளுக்கு நெடுஞ்சாலை அதிகாரிகள் சம்மன் அனுப்பினா்.

அதன் பிறகு 27.01.2025 தேதியிட்ட சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் டிவிஷன் பெஞ்சில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயா் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 06.03.2025 தேதியிட்ட தீா்ப்பின் மூலம் அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அகற்றுவதை தடுக்க உத்தரவிடக் கோரி அக்கட்சியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை 20.06.2025 தேதியிட்ட உத்தரவின் மூலம் தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். அதனை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் டிவிஷன் பெஞ்ச் முழு அமா்வுக்கு மாற்றியது.

இதனிடையே கொடிக்கம்பகளை அகற்றுமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் டிவிஷன் பெஞ்ச் 6.3.2025 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமாவாசி தேவா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.அந்த மனுவை ஆகஸ்ட் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமாவாசி தேவா் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையின் டிவிஷன் பெஞ்ச் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனுவையும் 13.8.2025 அன்று தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் டி.ராஜா செப்டம்பா் 17ஆம் தேதியிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளாா் .

X
Dinamani
www.dinamani.com