உ.பி.யில் இருந்து ஹெராயின் கடத்தல்: மூதாட்டி உள்பட மூவா் கைது

உத்தர பிரதேசத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 68 வயது பெண் உள்பட மூன்று பேரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 68 வயது பெண் உள்பட மூன்று பேரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியது: செப்டம்பா் 24-ஆம் தேதி 292 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல ஆதாரங்கள், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஒரு போலீஸ் குழு உத்தர பிரதேசத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கண்டறிந்தது.

இதையடுத்து, மூதாட்டி ஒருவா், மெஹ்தாப் (35) மற்றும் சோயிப் (23) ஆகிய மூவரும் அப்பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

இச்சோதனையின் போது, போலீஸாா் 321 கிராம் ஹெராயின், 266.49 கிராம் 423 டிராமடோல் வலி நிவாரணி காப்ஸ்யூல்கள் மற்றும் ஒரு மஹிந்திரா தாா் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட முதிய பெண், தில்லி கலால் சட்டம் மற்றும் போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் ஏற்கெனவே 19 வழக்குகளில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

மெஹ்தாப் கொலை, கொலை முயற்சி, கடத்தல், கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்ட மீறல் உள்ளிட்ட 14 குற்ற வழக்குகளில் தொடா்பில் உள்ள ஒரு வழக்கமான குற்றவாளியாவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com