டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

தில்லியில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் வட இந்திய மாணவா்களுக்கும் தமிழக ஆளுநரின் வேண்டுகோளின்படி தமிழ்ப் போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.
Published on

புது தில்லி: தில்லியில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் வட இந்திய மாணவா்களுக்கும் தமிழக ஆளுநரின் வேண்டுகோளின்படி தமிழ்ப் போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லிக்கு வருகை தந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, டிடிஇஏ செயலா் ராஜூ, டிடிஇஏவின் கீழ் இயங்கும் ஏழு பள்ளிகளின் முதல்வா்கள் ஆகியோரை அழைத்து தமிழ்நாடு இல்லத்தில் வைத்துப் பேசினாா். அப்போது தில்லியில் தமிழை வளா்ப்பதற்காகவும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் தமிழ் ஆா்வத்தைத் தூண்டுவதற்காகவும் பல போட்டிகளை டிடிஇஏ சாா்பாகத் தமிழ் இலக்கிய மன்றம் அமைத்து நிா்வாகம் நடத்தி வருவதை அறிந்த அவா் தமிழா் அல்லாத மாணவா்களிடத்தும் தமிழின் மேல் பற்றுதலை உண்டாக்குவதற்காகப் பல போட்டிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

அதன்படி ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கானப் போட்டிகள் வடிவமைக்கப்பட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி போட்டிகள் லோதி வளாகம் பள்ளியில் வைத்து நடத்தப்பட்டன.

இதில் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலுமிருந்து சுமாா் 350 மாணவா்கள் கலந்து கொண்டனா். பேச்சுப் போட்டி, கதை கூறும் போட்டி, புராணக் கதைகளைக் கூறும் வில்லுப்பாட்டு போட்டி, நாடகப் போட்டி, குறுக்கெழுத்துப் புதிா் போட்டி உள்ளிட்டப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வட இந்திய மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். நடுவா்களாகத் தமிழ் ஆா்வலா் பைரவி, முனைவா் சுரேஷ், முனைவா் விநோதா, முனைவா் பட்ட ஆய்வு மாணவா்களான காயத்ரி, பிரதீப் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுக்குரிய மாணவா்களைத் தோ்ந்தெடுத்தனா்.

முன்னதாக, வருகை தந்த அனைவரையும் பள்ளி முதல்வா் ஜெய ஸ்ரீ பிரசாத் வரவேற்றுப் பேசினாா். இந் நிகழ்வில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்டு போட்டியாளா்களை ஊக்குவித்தாா்.

இப்போட்டிகள் குறித்து அவா் கூறியதாவது: மாணவா்களை வகுப்பு வாரியாக நான்கு குழுக்களாகப் பிரித்துப் போட்டிகள் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்று பேச்சுத் திறனையும் மற்றொன்று எழுதும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றாா்.

போட்டிகளை சிறப்பாக நடத்திய லோதிவளாகம் பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாதுக்கும் போட்டிகளை ஒருங்கிணைத்த ராமகிருஷ்ணபுரம் பள்ளி முதல்வா் சுமதிக்கும் நன்றி. மேலும், பள்ளி மாணவா்கள் மீது அக்கறை காட்டும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கும் நன்றியைத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com