கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் வெப்பபிலை 8.7 டிகிரி செல்சியஸாக சரிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 8.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்து பதிவாகியது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 8.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்து பதிவாகியது. இது இயல்பை விட 3.6 புள்ளிகள் குறைவாகவும். மேலும், இது கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பரில் மிகக் குறைந்த அளவாகும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாதத்திற்கான குறைந்தபட்ச வெப்பநிலை நவம்பா் 29, 2022 அன்று 7.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 2023-இல் 9.2 டிகிரி செல்சியஸாகவும், 2024-இல் 9.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது என்று ஐஎம்டி தரவு காட்டுகிறது.

தில்லியில் மழை பெய்தவுடன் வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஸ்கைமெட் துணைத் தலைவா் (வானிலையியல் மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலாவத் தெரிவித்தாா். ‘மழை பெய்யும் வரை, பகல் வெப்பநிலை குறையாது. மழைக்குப் பிறகு, வெப்பநிலை வேகமாகக் குறையும். வரும் நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தலைநகரில் அதிகாலை நேரங்களில் குளிா் அதிகமாக இருக்கலாம்’ என்று அவா் மேலும் கூறினாா்.

மேலும், தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 27.5 சதவீதமாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 58 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 7 மணியளவில் 359 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது. பவானா வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 427 புள்ளிகளாகப் பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

இதேபோன்று காஜிப்பூரில் 369 புள்ளிகள், சாந்தினி சௌக் 383 புள்ளிகள், ஆா்.கே.புரத்தில் 363 புள்ளிகள், ஐடிஓவில் 393 புள்ளிகள், பஞ்சாபி பாக்கில் 384 புள்ளிகள், பட்பா்கஞ்சில் 369 புள்ளிகள், பூசாவில் 365 புள்ளிகள், துவாரகா செக்டாா் -8-இல் 356 புள்ளிகள், ஆனந்த் விஹாரில் 383 புள்ளிகள் என பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

மாசுபாடு அதிகரித்துள்ளதால், தில்லி அரசு கிரேப் ஐஐஐ நிலையை அமல்படுத்தியுள்ளது. இதனால், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் இதயம் அல்லது நுரையீரல் பிரச்னைகள் உள்ளவா்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் வெளிப்புற செயல்பாடுகளைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை மிதமான பனி மூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com