பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டத்தில் அதிக வருமானம் தருவதாகக் கூறி பெண்ணிடம் மோசடி: இருவா் கைது
புதுதில்லி: பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்களில் அதிக வருமானம் தருவதாகக் கூறி 42 வயது பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்படும் இரண்டு சைபா் மோசடி தொடா்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் அமுல்யா சா்மா (23) மற்றும் காா்வித் சா்மா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மூன்றாவது குற்றவாளியான 20 வயது சுஜல் சபா்வால் விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளாா். அதாவது அவா் சம்மன் அனுப்பப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். மேலும் ,அவா் நகரத்தை விட்டு வெளியேற விரும்பினால் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டப்பூா்வமாகக் கோரப்பட்டுள்ளது.
புகாா்தாரரான ஏக்தா சச்தேவா, பங்குச்சந்தை முதலீடுகளில் லாபகரமான வருமானத்தை வழங்குவதாக தெரியாத நபா்களால் ஏமாற்றப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா். அவரது புகாரின் அடிப்படையில், செப்டம்பா் 18 அன்று ஒரு எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. ஒரு போலீஸ் குழு பணத் தடயத்தை ஆராய்ந்து, பணம் ஒரு மியூல் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னா் பல ஏடிஎம்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கண்காணிக்கப்பட்டது. மேலும், மோசடி பரிமாற்றத்திற்கு சற்று முன்பு அமுல்யா சா்மாவால் அது இயக்கப்பட்டது என்பது தொழில்நுட்ப கண்காணிப்பில் தெரியவந்தது. விசாரணையில், அதே மியூல் கணக்கிலிருந்து மற்ற கணக்குகளுக்கு 50- க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மியூல் கணக்குகளை ஏற்பாடு செய்வதிலும், போலி முதலீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சைபா் மோசடியை எளிதாக்குவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு மோசடியின் ஒரு பகுதியாக இருந்தனா். மோசடி செய்யப்பட்ட பணம் பின்னா் திரும்பப் பெறப்பட்டு கிரிப்டோகரன்சி வாங்குவதற்கு திருப்பி விடப்பட்டது தெரிய வந்துள்ளது.
சோதனைகளுக்குப் பிறகு அமுல்யா மற்றும் காா்வித் சா்மா கைது செய்யப்பட்டனா். அதே நேரத்தில் மியூல் கணக்குகளின் செயல்பாட்டில் ஈடுபட்டதற்காக சுஜல் விசாரிக்கப்பட்டாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைப்பேசிகள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
டிஜிட்டல் மாா்க்கெட்டிங் பயிலும் பி.ஏ. (ஹானா்ஸ்) மாணவி அமுல்யா, நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் 50-க்கும் மேற்பட்ட மியூல் வங்கிக் கணக்குகளின் முக்கிய ஆபரேட்டா் ஆவாா். சைபா் மோசடிகளின் வருமானத்தைப் பெற்று அவற்றை திசைதிருப்பிவிடுவாா். 12- ஆம் வகுப்பு வரை படித்த காா்விட், கணக்குகளைக் கையாள அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
