துணைவேந்தா்கள் நியமனம் விவகாரம்: வழக்கு விசாரணை டிச.2க்கு ஒத்திவைப்பு
நமது நிருபா்
புதுதில்லி: துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட திருத்த சட்டங்களை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தொடா்ந்த மனு மீதான விசாரணையை டிசம்பர 2 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா , ‘மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிா்ணயிகப்பட்டது குறித்து குடியரசுத் தலைவா் கேள்வி எழுப்பிய வழக்கில் தீா்ப்பு வெளியான பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் ‘ என்று கூறினாா் .
அப்போது தமிழக அரசின் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகியோா்,‘இந்த வழக்கிற்கும் குடியரசுத் தலைவா் கேள்வி எழுப்பிய வழக்கிற்கும் எந்த தொடா்பும் இல்லை, பல்கலைக்கழக துணை வேந்தா்களை நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயா் நீதிமன்றம் தமிழக அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களை நியமிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்கள் தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது ,எனவே சென்னை உயா்நீதிமன்றத்தின் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் , இந்த வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்‘ என்று வாதங்களை முன் வைத்தனா்.
அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை அறிவுறுத்தலாம் என தெரிவித்தனா் .எனினும் பின்னா் உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணை டிசம்பா் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி , மாநில அரசு சமா்ப்பித்த பல்வேறு மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருந்த நிலையில் , ஆளுநரின் தாமதம் தவறானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியது.இதனையடுத்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி தமிழக அரசு கொண்டுவந்த திருத்த சட்டம் நிறைவேறியது.
தமிழக அரசின் இந்த திருத்த சட்டத்தை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.திருநெல்வேலியைச் சோ்ந்த கே. வெங்கடாசலபதி என்பவா், ‘பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.துணைவேந்தா்களை அரசே நியமிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டங்கள் அரசமைப்புக்கு முரணானவை, எனவே துணை வேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி கொண்டுவரப்பட்ட அனைத்து திருத்தச் சட்டங்களையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும்‘ எனக்கோரி மனு தாக்கல் செய்தாா் .
இதனிடையே சென்னை உயா்நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது . ஆனால் தமிழக அரசு தாக்கல் செய்த இடமாற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், சென்னை உயா் நீதிமன்றம் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை அதிரடியாக நிறுத்தி வைத்தது .
