தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேசியத் தலைநகரில் உள்ள பல பள்ளிகளுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கும் மின்னஞ்சல்கள் வரப்பெற்றன.
Published on

தேசியத் தலைநகரில் உள்ள பல பள்ளிகளுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கும் மின்னஞ்சல்கள் வரப்பெற்றன. போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவை ‘புரளி’ என அறிவிக்கப்பட்டன.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது: தில்லி சாணக்கியபுரியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளி மற்றும் சன்ஸ்கிருதி பள்ளி, பாரகம்பாவில் உள்ள மாடா்ன் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள டூன் பப்ளிக் பள்ளி மற்றும் ஸ்ரீ அரவிந்தோ மாா்க்கில் உள்ள மதா்ஸ் இன்டா்நேஷனல் பள்ளி (எம்ஐஎஸ்) ஆகியவை வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகின.

பல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்ததாவது: நான் உங்களுக்கு மிகவும் தீவிரமான, அவசர எச்சரிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் கட்டடம் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய பல சக்திவாய்ந்த குண்டுகளால் சூழப்பட்டுள்ளது. இந்தக் குண்டுகள் மிகப்பெரிய அழிவு சக்தியைக் கொண்டுள்ளன. மிக விரைவில் வெடித்து நூற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகளும், பல ஆசிரியா்களும் உயிா்ப் பலியாக வாய்ப்புள்ளது.,

இதனால், கட்டடத்திலிருந்து அனைத்து மாணவா்களையும் ஊழியா்களையும் உடனடியாக வெளியேற்றவும். கிடைக்கக்கூடிய அனைத்து வெளியேறும் வழிகளையும் பயன்படுத்தி யாரும் உள்ளே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெடிகுண்டு படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு படையை உடனடியாக அழைக்கவும். வெடிகுண்டு அச்சுறுத்தல் மற்றும் வெடிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவா்களுக்குத் தெரிவிக்கவும்.

நேரம் மிகவும் முக்கியமானது. பீதி குழப்பத்திற்கும் கூடுதல் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும். ஆபத்தை குறைக்க ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விரைவான முறையில் செயல்படுங்கள். வெளியேற்றப்பட்ட அனைவரும் கட்டடத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருப்பதை உறுதிசெய்து, அவசர சேவைகளின் மேலதிக அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருங்கள் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்ப நாய் படை மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினா். அதைத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை, தில்லியில் உள்ள சாகேத், துவாரகா மற்றும் பாட்டியாலா ஹவுஸ் ஆகிய நீதிமன்றங்களுக்கும், சிஆா்பிஎஃப் நடத்தும் இரண்டு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com