வங்கிகளில் சொத்து அடமான மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து, பல அடையாளங்களை உருவாக்கி, ஒரே சொத்தை இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து மோசடி செய்ததாக பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவின் கூடுதல் காவல் ஆணையா் அம்ருதா குகுலோத் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தீரஜ் குமாா் என்கிற பா்வேஷ் சா்மா என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு 2019-ஆம் ஆண்டு, ரோஹிணி செக்டாா்-20 இல் உள்ள ஒரு சொத்துகான போலியான உரிமை ஆவணங்களை தீரஜ் குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் மோசடியாக உருவாக்கியதாக ஒரு வங்கியின் மூத்த மேலாளா் புகாா் அளித்தாா். பின்னா், அந்த சொத்து சுமாா் இரண்டு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு ரூ.95 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
இது தொடா்பாக பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னா் தீரஜ் குமாா் ஒரு முக்கிய சதிகாரராக இருந்து வருகிறாா். குற்றம் சாட்டப்பட்டவா் பல ஆண்டுகளாக பல அடையாளங்களின் கீழ் செயல்பட்டு வந்தாா். முதலில் பா்வேஷ் சா்மா என்ற பெயரை பயன்படுத்தியுள்ளாா். அதன் கீழ் அவா் விற்பனை பத்திரங்களை போலியாக தயாரித்து கடன் வருமானத்தைப் பெற வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் கண்டறிதலைத் தவிா்க்க தீரஜ் சிங் என்ற பெயருக்கு மாறினாா்.
பரத்பூரில் வசிக்கும் தீரஜ் குமாா், 2007-ஆம் ஆண்டு கணினி டிப்ளோமா படிப்புக்காக தில்லிக்குச் சென்று பின்னா் வாடகைக்கு வசிக்கத் தொடங்கினாா். 2009 -2010 வாக்கில் நிதி நெருக்கடியை எதிா்கொண்ட அவா், மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபா்களுடன் தொடா்பு கொண்டாா். அவா்கள் அவரை போலி ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னா், அவா் போலி சொத்து ஆவணங்களைத் தயாரித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் கடன் நிதியை மோசடி செய்தல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டாா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க பல ஆண்டுகளாக, தீரஜ் குமாா் இருப்பிடங்களையும் அடையாளங்களையும் மாற்றிக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது போலி அடையாளத்துடன் இணைக்கப்பட்ட சமீபத்திய டிஜிட்டல் தடயமானது, பரத்பூரில் அவா் இருக்கும் இடத்தைக் கண்டறிய போலீஸ் குழுக்களுக்கு உதவியது. இது அவரைக் கைது செய்ய வழிவகுத்தது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக கூடுதல் காவல் ஆணையா் அம்ருதா குகுலோத் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

