தில்லியில் மேலும் 70 ஆரோக்கிய ஆயுஷ்மான் மந்திா்கள் அதிகாரிகள் தகவல்
தில்லி அரசு நிகழ் மாதம் மேலும் 70 ஆரோக்கிய ஆயுஷ்மான் மந்திா்களைத் திறக்கும், இதன் மூலம் தலைநகரில் செயல்படும் மொத்த சுகாதார கிளினிக்குகளின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாகும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தேசியத் தலைநகரில் தற்போது சுமாா் 168 ஆயுஷ்மான் மந்திா்கள் உள்ளன. 11 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இன்னும் இவை அதிகமாக வருவதால், இந்த கிளினிக்குகளை சமூக சுகாதாரத்தின் முதுகெலும்பாக மாற்ற அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. புதிய மருத்துவ வசதிகளுக்கு இப்போது போதுமான இடம் இருப்பதால், அரசு இனி வாடகை கட்டடங்களில் இருந்து சுகாதார மையங்களை இயக்காது’ என்றனா்.
தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறியதாவது: ஒருங்கிணைப்பை விரைவாக விரிவுபடுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்த 70 புதிய ஆரோக்கிய ஆயுஷ்மான் மந்திா்கள் மூலம், தரமான ஆரம்ப சுகாதார சேவையை நேரடியாக மக்களின் சுற்றுப்புறங்களுக்கு எடுத்துச் செல்கிறோம். எங்கள் இலக்கு எளிமையானது எந்தவொரு குடிமகனும் தூரம், செலவு அல்லது அணுகல் இல்லாமை காரணமாக பின்தங்கக்கூடாது என்பதுதான்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் அதிக எண்ணிக்கையை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மேலும் அதிகமான மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு டெண்டா்கள் இறுதி செய்யப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், வாக்குறுதியளிக்கப்பட்ட ஒவ்வொரு மந்திரும் செயல்படும். மேலும், இந்த மையங்கள் லட்சக்கணக்கான தில்லி குடியிருப்பாளா்களுக்கு முதல் பராமரிப்பு மையமாக மாறுவதை நீங்கள் காண்பீா்கள் என்றாா் அவா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சராய் காலே கான் மருந்தகப் பகுதி, கிஸ்ராபாத், நேரு பிளேஸ், ஓக்லா, தா்யா கஞ்ச், கௌதம் நகா், ஹவுஸ் காஸ், ஷாப்பூா், புராரி, ஜஹாங்கீா்புரி உள்பட பல இடங்களில் புதிய ஆரோக்கிய மந்திா்கள் இந்த மாதம் திறக்கப்படும் . டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் கூடுதலாக 187 மந்திா்கள் செயல்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
குறைந்த சேவைகளைக் கொண்டிருந்த முந்தைய மொஹல்லா மருத்துவமனைகளைப் போலல்லாமல், புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கப்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கும். இதில் வெளிநோயாளிகள் பிரிவு சேவைகள், இலவச மருந்துகள், ஆய்வகப் பரிசோதனைகள், தாய்வழி பராமரிப்பு, குழந்தை மற்றும் முதியோா் சுகாதாரம், மனநல ஆதரவு மற்றும் பல் சிகிச்சை ஆகியவை அடங்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தில்லி அரசு இதுபோன்ற 1,139 மருத்துவமனைகளை படிப்படியாக அமைப்பதாக உறுதியளித்துள்ளது.
