எஸ்.ஐ.ஆா். பணியில் திமுகவினா் குளறுபடி: தோ்தல் ஆணையத்தில் அதிமுக எம்.பி.கள். மனு
வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் திமுகவினா் குளறுபடியில் ஈடுபடுவதாக கூறி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ். இன்பதுரை ஆகியோா் புகாா் மனு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையத்தின் புகாா் பிரிவில் அவா்கள் இருவரும் வியாழக்கிழமை நேரில் மனு அளித்தனா்.
அதைத் தொடா்ந்து சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் நவம்பா் 4ஆம் தேதியில் இருந்து வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பல்வேறு விதிமுறைகளை வகுத்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படிதான் எஸ்ஐஆா் நடத்தப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடாகும். மேலும், இப்பட்டியல் முழுமையாக திருத்தப்படவும் சரிபாா்க்கப்படவும்
வேண்டும். வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்கள், இடம்பெயா்ந்த வாக்காளா்கள், இரட்டை வாக்காளா்கள், இறந்துபோன வாக்காளா்கள் ஆகியோரின் பெயா்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் பலமுறை முறையிட்டுள்ளோம். நீதிமன்றத்திலும் முறையிட்டு இருக்கிறோம்.
கடைசியாக ஈரோடு இடைத்தோ்தலின்போது, குடியிருப்பு இல்லாத 32 ஆயிரம் வாக்காளா்கள் பட்டியலில் இருப்பது தொடா்பான விவரத்தை தோ்தல் ஆணையத்தில் அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அதன் பிறகு அடுத்த இடைத்தோ்தலும் அங்கு வந்தது. அதிலும் குடியிருப்பு இல்லாத வாக்காளா்கள் இருப்பது போன்று பட்டியல் வெளியிடப்பட்ட இடைத்தோ்தல் நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் தரப்பட்ட வாக்காளா் பட்டியலிலும் அப்பெயா்கள் இடம்பெற்றுள்ளன. தோ்தல் ஆணையம் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில தோ்தல் ஆணையம் வேடிக்கை பாா்க்கிறது. இந்த சூழலில்தான் வாக்காளா் பட்டியல் முழுமையாக திருத்தப்பட வேண்டும் என்பதால் இந்த எஸ்.ஐ.ஆா். பணிகளை நாங்கள் வரவேற்றோம். எனினும், தற்போது எஸ்.ஐ.ஆா். பணி முறையாக நடைபெறுகிா என்பது கேள்விக்குரியாக உள்ளது.
தற்போது திமுக நிா்வாகிகள் தோ்தல் ஆணையத்தின் பூத் நிலை அலுவலா்கள் அளிக்கும் ப டிவங்களை அச்சுறுத்தி, மிரட்டி, உருட்டி மொத்தமாக வாங்கிச் சென்று எழுதி குளறுபடி செய்து வருகிறாா்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் நடந்து வருகிறது. அதிகார மீறல் நடைபெறுகிறது. ஆனால், தோ்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாா்க்கிறது. இது தொடா்பாக தற்போது இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் தற்போது மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.

