

தில்லியின் ஆபத்தான காற்று மாசுபாடு கா்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், மூச்சுத் திணறல், சோா்வு மற்றும் உயா் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனா்.
தில்லியின் காற்று மாசுபாடு தொடா்ந்து ஆபத்தான அளவில் அதிகரித்து வருவதால், மூச்சுத் திணறல், சோா்வு மற்றும் உயா் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிப் பெண்களிடமிருந்து வரும் புகாா்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
நச்சுக் காற்று கா்ப்பிணித் தாய்மாா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதார நிபுணா்கள் குறிப்பிட்டுள்ளனா். இருப்பினும், திடீா் இடமாற்றம் அல்லது பயணம் போன்றவற்றால் தூண்டப்படும் நகா்வுகளை அவா்கள் அறிவுறுத்துவதில்லை. இது கா்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்காது என்று அவா்கள் கூறுகின்றனா்.
கா்ப்பிணிப் பெண்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். குறிப்பாக, மாசுபாடு உச்சத்தில் இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிா்த்தல், தீங்கு விளைவிக்கும் மாசு துகள்களை வடிகட்ட வெளியில் செல்லும்போது முகமூடிகளைப் பயன்படுத்துதல், வாழும் மற்றும் தூங்கும் பகுதிகளில் காற்று சுத்திகரிப்பான்களை இயக்குதல், நச்சுக்களை வெளியேற்றவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் நிறைய தண்ணீா் குடித்தல், காற்றின் தரக் குறியீடுகளுக்கு ஏற்ப தினசரி வழக்கங்களை சரிசெய்து கொள்தல் ஆகிய நடவடிக்கைகளை மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா்.
தில்லி காற்று மாசானது குழந்தைகள், முதியவா்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடியவா்களை தொடா்ந்து அச்சுறுத்துகிறது என்று சுகாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.