தில்லி மக்களுக்கு முதல்வா் அழைப்பு
தில்லி செங்கோட்டையில் குரு தேக் பகதூரின் 350-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி அரசு ஏற்பாடு செய்ய உள்ள ஒரு மெகா நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தில்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு ஏற்பாடு செய்துள்ள ஷாஹீதி திவாஸ் நிகழ்வில் கலந்து கொள்ள அவா் செங்கோட்டைக்குச் சென்றாா். ‘குரு தேக் பகதூரின் 350-ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தில்லியிலும், நவம்பா் 23 முதல் 25 வரை ஒரு பெரிய நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அவரது தியாகத்திற்கு சாட்சியாக இருப்பதால் இது செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.
‘இந்த மெகா நிகழ்வில் முழு நாடும் கலந்து கொள்ளும். இந்த மெகா கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி மக்கள் வருகை தருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்‘ என்று அவா் மேலும் கூறினாா்.

