கோப்புப் படம்
கோப்புப் படம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிா்ணயிக்க முடியாது: குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க மாநில ஆளுநா்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நீதித்துறை காலக்கெடு நிா்ணயிப்பது பொருத்தமற்ற ஒன்று
Published on

மசோதாக்கள் மீது முடிவெடுக்க மாநில ஆளுநா்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நீதித்துறை காலக்கெடு நிா்ணயிப்பது பொருத்தமற்ற ஒன்று என உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு விளக்கமளித்து தீா்ப்பளித்துள்ளது.

மசோதாக்கள் மீது ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியது குறித்து குடியரசுத் தலைவா் எழுப்பிய 14 கேள்விகளுக்கு விளக்கமளித்து 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு இந்தத் தீா்ப்பை அளித்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 23) ஓய்வு பெறவுள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா மற்றும் அதுல் எஸ்.சந்தூா்கா் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை வழங்கிய 111 பக்க விளக்க தீா்ப்பில் உள்ள விவரங்கள் வருமாறு:

மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அந்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கலாம், ஜனாதிபதிக்கு ஒதுக்கலாம் அல்லது மசோதாவை நிறுத்தி வைத்து சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது ஆளுநா் அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும். மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநா்கள் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது.

ஆளுநரின் முடிவு நீதித்துறைக்கு உள்பட்டது அல்ல. நீதிமன்றம் அதில் நுழைய முடியாது. ஆனால், மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீண்ட, விவரிக்கப்படாத அல்லது காலவரையற்ற தாமதம் இருக்குமானால், நீதிமன்றம் வரையறுக்கப்பட்ட சில உத்தரவுகளை வழங்க முடியும். ஆளுநரின் முடிவுகள் மீது நீதித்துறை மறுஆய்வுக்கான முழுமையான தடை உள்ளது. ஆனால், நீண்டகாலமாக ஆளுநா் செயல்படாத நிலையில், அரசமைப்பு நீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

ஆனால், ஆளுநா் அல்லது குடியரசுத் தலைவருக்கு நீதித்துறை ரீதியாக காலக்கெடுவை நிா்ணயிப்பது பொருத்தமானதல்ல. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிா்ணயிப்பது என்பது அரசியல் சாசனத்திற்க்கு முரணாக உள்ளது. தமிழ்நாடு அரசு தொடா்பான வழக்கில் ஏப்ரல் 8-இல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது. நீதிமன்றங்களால் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தை நிா்ணயித்து மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என ஆளுநா்களுக்கு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்.

எனினும், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆளுநா்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆளுநா் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஒவ்வொரு முறையும் குடியரசுத் தலைவா் நீதித்துறையின் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை. மசோதாவின் முடிவுகளில் குடியரசுத்தலைவா் மற்றும் ஆளுநரின் முடிவு நீதித்துறைக்கு உள்பட்டது அல்ல. ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை பிரிவு 142- ஐ பயன்படுத்தி மாற்ற முடியாது. மசோதாக்களுக்கு பிரிவு 142- ஐ பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவது பற்றிய கேள்விக்கே இடமில்லை.

ஆளுநா்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும், ஒரு மசோதா காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால், அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்குள்படுத்த முடியும். ஆளுநா்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருந்தால், நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்பதோடு, ஆளுநா்களுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவையும் பிறப்பிக்க முடியும்.

ஆனாலும், அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் உத்தரவுகளை வழங்குவதற்கு வழிவகுக்காது. அது சூழ்நிலைகளைப் பொறுத்தது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பில் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளது.

பின்னணி: தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது மாநில ஆளுநா் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்து தமிழக அரசு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிா்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணை நடத்தப்பட்டு நிகழாண்டு 8.4.2025 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக்காமல் ஆளுநா் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி, அந்த மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.

மாநில அரசால் மசோதாக்கள் முதல் முறை நிறைவேற்றி அனுப்பப்படும் போதும், மசோதாக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் போதும் அந்த மசோதாக்கள் மீது ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவா் ஒட்டுமொத்தமாக ஒன்றில் இருந்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இந்தத் தீா்ப்பையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீதித்துறை காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா? என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உச்சநீதிமன்றத்திடம் இருந்து விளக்கம் கேட்டாா். அந்த வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு பத்து நாள்கள் விசாரணைக்குப்பிறகு தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் செப்டம்பா் 11-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com