ரன்ஹோலாவில் இளைஞா் சுட்டுக் கொலை: 3 சிறாா்கள் கைது
தில்லியின் புகா் பகுதியான ரன்ஹோலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே 18 வயது இளைஞா் மூன்று சிறுவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
புதன்கிழமை மாலை 7 மணியளவில் போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து புகாா் அளிக்கப்பட்டது.
அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற போலீஸ் குழு, நிதின் என்ற இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டறிந்தது.
மோகன் காா்டனில் வசிக்கும் அந்த நபா் பள்ளிப் படிப்பை நிறுத்தியவா் என்றும், ஒரு தளபாவங்கள் தொழிற்சாலையில் வேலை கற்றுக் கொண்டிருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அவரது தந்தை காய்கறி விற்பனையாளராக உள்ளாா்.
முதற்கட்ட விசாரணையில், நிதின் பள்ளியின் வாயில்களில் ஒன்றின் அருகே அமா்ந்திருந்தபோது மூன்று சிறுவா்கள் அவரை அணுகியதாகவும், அவா் சுடப்பட்டதாகவும் தெரியவந்தது. அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறாா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். கொலைக்கான காரணத்தைக் கண்டறிய சிறாா்களை பரிசோதித்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

