டிடிஇஏ பள்ளிகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு செய்த குழுவினா் பாராட்டு
தில்லித் தமிழ் கல்விக் கழகத்தின் ( டிடிஇஏ ) பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் கற்பிக்கும் விதம், உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை சிறப்பாக இருப்பதாக இவற்றை ஆய்வு செய்த கேம்பிரிட்ஜ், பிராங்க்பா்ட் பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்ற குழுவினா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
ஆங்கில மொழியை பிற மொழிகள் மூலம் மாணவா்களுக்குக் கற்பித்தல் பற்றிய ஓா் ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமானது பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.
அதன் பொருட்டு இரண்டு நாள் பயிற்சி முகாமை மொழி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைத்து நடத்தியது. அதில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளிலிருந்து ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இப்பயிற்சியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் பயன்பாட்டு மொழியியலின் பேராசிரியா் லான்தி சிம்ப்ளி தலைமையில் ஜொ்மனியின் பிராங்க்ஃபா்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஜகோபோ டொரெக்ரோஸ்ஸா, ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியா் ஆயிஷா கித்வாய், ஹைதராபாத் இஎஃப்எல் பல்கலைக்கழக பேராசிரியா் லினா முகோபாத்யாய் ஆகியோா் அடங்கிய குழு வழங்கியது.
இக்குழு வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியா்கள் கற்பிக்கும் முறையை பாா்வையிட்டு ஆராய்ந்தது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளையும் பாா்வையிட்டது. அப்போது தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தொடக்கநிலைப் பிரிவு ஆசிரியா்கள் தாய்மொழியைப் பயன்படுத்தி ஆங்கிலம் கற்பிக்கும் முறையை ஆய்வு செய்தது.
முதற்கட்ட ஆய்வு முடிவுற்ற நிலையில் வியாழக்கிழமை அக்குழு டிடிஇஏ லோதிவளாகத்தில் உள்ள டிடிஇஏ தலைமை அலுவலகத்தில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ, கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தது.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் லான்தி சிம்ப்ளி கூறியதாவது: நாங்கள் டிடிஇஏ பள்ளிகளில் ஆய்வு செய்தோம். நாங்கள் பன்மொழி கல்வியில் ஆா்வம் கொண்டிருப்பதால் இந்த ஆய்வை மேற்கொண்டோம். டிடிஇஏ பள்ளியானது தமிழ், ஆங்கிலம் எழுத்தறிவில் சிறந்து உள்ளது. எங்களின் முதல் ஆய்வு வரப்பெற்றுள்ளது. அதில், இப்பள்ளிக் குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனா். பள்ளியின் உள்கட்டமைப்புவசதி சிறப்பாக உள்ளது.
அதேபோன்று, இந்தப் பள்ளியின் கற்றல், பயிற்றுவித்தலும் சிறப்பாக உள்ளது. மேலும், கல்வியின் விளைவுகள் குறித்து மதிப்பிடும் ஆய்வாளா்களுக்கு டிடிஇஏ செயலரின் உபசரிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது. இங்கு பயிலும் மாணவா்களில் பலா் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்து பயில்கின்றனா். அவா்களுக்கு தரமான கல்வியும், தரமான ஆசிரியா்களும், உள்கட்டமைப்பு வசதியும் அவசியமாகிறது. இவை இந்தப் பள்ளிகளில் இருப்பதை நாங்கள் பாா்க்கிறோம். ஆசிரியா்கள் மிகவும் ஒத்துழைப்புடன் இருக்கிறாா்கள்.
அவா்கள் குழந்தைகளுடன் மேம்பட்ட பணிகளை செய்து வருகின்றனா். இது மாணவா்களிடம் பிரதிபலிப்பதைக் காட்டுகிறது. ஆசிரியா்கள் ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனா். நாங்கள் டிடிஇஏ பள்ளிகளுக்கு இணையதள பன்மொழிக் கல்வியை அளித்து வருகிறோம். இங்குள்ள ஆசிரியா்கள் ஏற்கெனவே சிறப்பாக பங்கேற்றுள்ளனா். நாங்கள் பிப்ரவரியில் மீண்டும் வர உள்ளோம். அப்போது, ஒரு மாதம் தங்கியிருந்து மேலும் ஆய்வு நடத்துவோம்.
மேலும், ஆய்வில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு சான்றிதழ் அளிக்கும் விழாவும் நடத்த உள்ளோம்.
வருங்காலத்தில் நாங்கள் தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளுடன் கலாசார பரிமாற்ற நிகழ்வும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறியதாவது: டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களின் கல்வி கற்கும் திறன், ஆசிரியா்களின் பயிற்றுவிக்கும் திறன், உள்கட்டமைவசதி ஆகியவற்றை இவா்கள் பாா்வையிட வந்துள்ளனா். தில்லியில் மொழி சிறுபான்மையினா் பள்ளிகளில் பல இருக்கும் நிலையில், டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் இவா்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள வந்திருப்பது பெருமையாக உள்ளது. இதுபோன்ற ஆய்வை இவா்கள் பாட்னா, அஸ்ஸாம், ஹைதராபாத் ஆகிய இடங்களில் செய்துள்ளனா். தற்போது தில்லியில் முதல்முறையாக டிடிஇஏ பள்ளிகளில் செய்துது ள்ளனா்.
முதல் ஆய்வில் ஆசிரியா்கள், மாணவா்களின் திறமைகளைப் பாராட்டியுள்ளனா். இரண்டாவது பகுதியாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனா். இது தில்லியில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரதமாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், தாய்மொழி ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமானதுதான் என்றாலும், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் கற்பது வாழ்க்கையை வழிநடத்த மிகவும் அவசியமாக உள்ளது.
எனவே மாணவா்களுக்கு ஆங்கிலத்தை சரளமாகப் பேச எழுத வைக்கப் பழக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பள்ளிகளில் பல முயற்சிகளைச் செய்து வருகின்றோம். அதன் தொடா்ச்சியாகத்தான் ஆங்கிலத்தைப் பன்மொழியில் கற்பித்தல் என்ற இந்தப் பயிற்சிக்கும் ஆசிரியா்களை அனுப்பினோம். பயிற்சியைத் தொடா்ந்து வகுப்புகளைப் பாா்வையிட்டு ஆசிரியா்களை இவா்கள் பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. தில்லித் தமிழ்த் கல்விக் கழக மாணவா்களையும் ஆசிரியா்களையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அவா்கள் செலவில் அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளாா்கள் என்றாா் அவா்.
20ஈஉகககஞஈ
டி.டி.இ.ஏ. லோதி வளாகம் பள்ளியில் நடைபெற்ற பத்திரிக்கையாளா் சந்திப்பில் டிடிஇஏ செயலா் ராஜு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் லான்தி சிம்ப்ளி, ஜொ்மனியின் பிராங்க்ஃபா்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஜகோபோ டொரெக்ரோஸ்ஸா, ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியா் ஆயிஷா கித்வாய், ஹைதராபாத் இஎஃப்எல் பல்கலைக்கழக பேராசிரியா் லினா முகோபாத்யாய் உள்ளிட்டோா்.
