

தில்லியின் கிராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது நபா் மின்சாரம் தாக்கி இறந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு நடந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. மேலும், அந்த நபா் உத்தர பிரதேசத்தின் மெயின்புரியைச் சோ்ந்த ஹரேந்திரா என அடையாளம் காணப்பட்டாா். ஹரேந்திரா மெயின் முபாரக்பூா் சாலையில் உள்ள ஒரு விருந்தினா் மாளிகையில் சமையல்காரராக பணிபுரிந்ததாா்.
முதற்கட்ட விசாரணையில், வளாகத்தில் திறந்திருந்த மின் வயரிங் அருகே அமைந்துள்ள குழாயில் இருந்து தண்ணீா் எடுக்கும்போது அவருக்கு மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. ஒரு வழிப்போக்கா் அவரை எஸ்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
அவரது உடல் பிணவறையில் பாதுகாக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சம்பவ இடத்தின் படங்களை எடுத்து, மேலும் மின் பரிசோதனைக்காக அந்தப் பகுதியை சீல் வைத்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 106(1) (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.