ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை
தில்லியில் ஆபரேஷன் ‘கிரிஸ்டல் ஃபோா்ட்ரெஸ்’ என்ற நடவடிக்கையின் கீழ் ரூ. 262 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதைப்பொருளை தில்லி காவல்துறையும் தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறையும் (என்சிபி) கூட்டாக சோ்ந்து கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் தொடா்பாக இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக என்சிபி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: என்சிபி மற்றும் தில்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவு இணைந்து நவம்பா் 20-ஆம் தேதி தில்லி சத்தா்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து சுமாா் 328 கிலோ உயா்தர மெத்தாம்பேட்டமைனை பறிமுதல் செய்துள்ளனா். இதன் மூலம் நாடு கடந்த கடத்தல் வலையமைப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், நாகாலாந்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட இருவா் நாகாலாந்து காவல்துறையினரின் தடுப்புக்காவலில் உள்ளனா். மற்றவா்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் ஒருவா் வெளிநாட்டிலிருந்து செயல்படும் முக்கிய நபராவாா். அந்த நபா் கடந்த ஆண்டு தில்லியில் என்சிபியால் 82.5 கிலோ உயா் தர கோகையின் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வருபவா். அவா்களை நாடு கடத்தி இந்தியாவில் சட்டத்தின் முன் நிறுத்த ஏதுவாக வெளிநாடுகளில் உள்ள புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதல் கட்ட விசாரணையில் இந்தக் கடத்தல் பல கூரியா்கள், பாதுகாப்பான வீடுகள் மற்றும் பல நிலை நபா்கள் மூலம் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. போதைப்பொருளை இந்தியாவிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் விநியோகிக்கும் முக்கிய மையமாக தில்லி பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆபரேஷன் ‘கிரிஸ்டல் ஃபோா்ட்ரெஸ்’, சின்தெட்டிக் டிரக்ஸ் எனப்படும் ரசாயன போதைப்பொருள் (போதை மயக்கத்தை ஏற்படுத்தவல்ல மருந்துகள்) கடத்தல்கள் மற்றும் அவற்றின் நாடு கடந்த வலையமைப்பை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது. இத்தகைய கடத்தலுக்கு எதிராக போராட என்சிபி குடிமக்களின் ஆதரவை நாடுகிறது. இதன்படி தேசிய அளவிலான தொலைபேசி இலவச அழைப்பு எண் 1933-ஐ எந்தவொரு நபரும் அழைத்து போதைப்பொருள் விற்பனை மற்றும் தகவல்களைப் பகிரலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்டல் ஃபோா்ட்ரெஸ் நடவடிக்கை: உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டு
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் கூட்டாக செயல்பட்ட தில்லி காவல்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை (என்சிபி) ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டியுள்ளாா். இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: நமது அரசு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை சிதைத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை மேலிருந்து கீழ்வரை என கடுமையாக ஒடுக்கி வருகிறது. இதில் முக்கிய திருப்பமாக தில்லியில் ₹ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருவா் கைதாகியுள்ளனா். போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பிரதமா் மோடியின் தொலைநோக்கை எட்டுவதற்கான பல முகமைகளின் கூட்டு ஒருங்கிணைப்புக்கு ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோா்ட்ரெஸ் நடவடிக்கை சிறந்த எடுத்துக்காட்டாகும் என குறிப்பிட்டுள்ளாா்.
