முண்ட்காவில் சட்ட விரோத எல்பிஜி தயாரிப்பு நிலையம்: 5 போ் கைது
தில்லியின் முண்ட்காவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இயங்கும் ஒரு பெரிய சட்டவிரோத எல்பிஜி சிலிண்டா் எரிவாயு நிரப்பும் நிலையத்தை தில்லி காவல் துறையினா் கண்டுபிடித்ததோடு, 5 பேரை கைது செய்து 500- க்கும் மேற்பட்ட சிலிண்டா்களை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்,
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஸ்வாா்ன் பாா்க் பகுதியில் உள்ள வளாகத்தில் ஒரு போலீஸ் குழு சோதனை நடத்தியது. அங்கு வீட்டு சிலிண்டா்களில் உள்ள எல்பிஜி சட்டவிரோதமாக குளிா்காலத்தில் அதிக விலையில் விற்பனை செய்வதற்காக வணிக சிலிண்டா்களுக்கு மாற்றப்பட்டது. இது அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறி சேமித்து வைக்கப்பட்டிருந்த 563 எல்பிஜி சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 15 மின்னணு எரிவாயு நிரப்புதல் இயந்திரங்கள், இரண்டு எடை இயந்திரங்கள் மற்றும் சட்டவிரோத வணிக மறு நிரப்புதல் செயல்முறைக்கு பயன்படுத்தப்பட்ட 372 சிலிண்டா் முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சாய் லாஜிஸ்டிக்ஸ் என்ற கிடங்கில் இருந்து சட்டவிரோத நடவடிக்கை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட சிலிண்டா்களை விநியோகிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பிக்-அப் வாகனம் மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தொழிலாளா்கள் ராம்னிவாஸ் (மேலாளா்) அவ்னேஷ் மற்றும் மனோஜ் குமாா் (ரீஃபில்லிங் ஊழியா்கள்) மற்றும் அா்ஜுன் மற்றும் ஷாருக் கான் (ஏற்றுபவா் / இறக்குபவா்) ஆகியோா் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனா்.
விசாரணையின் போது, தற்போது தலைமறைவாக உள்ள பீராகரியில் வசிக்கும் வினோத் குமாா் இந்த மோசடியை நடத்தி வருவதை அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, முக்கிய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அவா்.
