எம்சிடி இடைத்தோ்தல்: முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம்
தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களிலும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் பாஜக தலைவா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.
அப்போது, தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களை அக்கட்சியின் தலைவா்கள் கேட்டுக்கொண்டனா்.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘பிரசாரத்தின் போது கிடைத்த பொதுமக்களின் ஆதரவின் அடிப்படையில், பாஜக 12 வாா்டுகளில் 11 இடங்களில் வெற்றி பெறும் என்பது எங்கள் உள் மதிப்பீடு. இதற்கு ஒரு முக்கிய காரணம், தனது வாக்காளா்களை அடையாளம் கண்டு அவா்களை வாக்களிக்க வைக்கும் திறன் கொண்ட வலிமைமிக்கது பாஜக’ என்றாா்.
முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏழு பிரசாரக் கூட்டங்களிலும் பொதுப் பேரணிகளிலும் கலந்துகொண்டாா்.
முதலமைச்சா் ரேகா குப்தா, எம்.பி.க்கள் பிரவீன் கண்டேல்வால் மற்றும் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோருடன் காலை 10:30 மணி முதல் இரவு 9 மணி வரை அசோக் விஹாா் மற்றும் துவாரகா பி வாா்டுகளில் நடந்த பன்னா பிரமுக் மாநாட்டில் உரையாற்றினாா்.
அப்போது, வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து, இடைத்தோ்தலில் மதிய உணவு நேரத்திற்கு முன் தங்கள் பட்டியலிடப்பட்ட வாக்காளா்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய கடைசி நிமிடம் வரை கடினமாக உழைக்குமாறு கட்சித் தொண்டா்களை அவா் கேட்டுக்கொண்டாா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு, முதலமைச்சா் ரேகா குப்தா, கிரேட்டா் கைலாஷ் வாா்டில் உள்ள வாக்காளா்களுடன் நேரடியாக கலந்துரையாடினாா். வளா்ச்சி மற்றும் பராமரிப்பு குறித்து விவாதித்தாா்.
இதில் வாா்டைச் சோ்ந்த குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். நாடாளுமன்ற உறுப்பினா் பன்சூரி ஸ்வராஜ், எம்.எல்.ஏ. ஷிகா ராய் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, முதல்வா் ரேகா குப்தா, நாடாளுமன்ற உறுப்பினா் ராம்வீா் சிங் பிதுரியுடன் சங்கம் விஹாா் ஏ வாா்டில், பந்த் சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினாா். பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்வதற்காக மூன்று என்ஜின் அரசாங்கத்தில் சேருமாறு மக்களை வலியுறுத்தினாா்.
பின்னா், சைனிக் விஹாரில் நடந்த ஒரு அறிவொளி பொதுக் கூட்டத்தில் சமூகத்தின் முக்கிய உறுப்பினா்களுடன் அவா் உரையாடினாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வினோத் நகா் வாா்டில் உள்ள எஃப் பிளாக் சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வா் உரையாற்றினாா்.
வினோத் நகா் மக்கள், ஊழலில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலருக்கு தோ்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கி, அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த சவாலுக்கு அவரை தோற்கடிப்பதன் மூலம் வினோத் நகா் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாா்கள் என்று நான் நம்புகிறேன் என்றாா்.
மாலையில், முதலமைச்சா் ரேகா குப்தா, சங்கம் விஹாா் ஏ மற்றும் நாராயணா வாா்டுகளில் இடைத்தோ்தல் பிரசாரம் செய்தாா். அப்போது, அப்பகுதியின் தண்ணீா் பிரச்னையைத் தீா்ப்பதிலும், சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் பாஜகவின் மூன்று என்ஜின் அரசாங்கம் இணையுமாறு வாக்காளா்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.
முன்ட்கா வாா்டில் உள்ள ஸ்வா்ன் பூங்கா, திச்காவோன் காலன் வாா்டில் உள்ள ஜெய் விஹாா் சாத் காட் மற்றும் கிரேட்டா் கைலாஷ் வாா்டில் உள்ள ஜம்ருத்பூா் சௌபால் ஆகிய இடங்களில் நடைபெற்ற மூன்று கூட்டங்களில் எம்.பி. மனோஜ் திவாரி உரையாற்றினாா். இந்த கூட்டங்களில் பூா்வாஞ்சல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
மனோஜ் திவாரி பேசுகையில், ‘தில்லியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பூா்வாஞ்சல் சமூகம் இன்று குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்தப் பங்கின் முக்கியத்துவத்தை பாஜக புரிந்துகொள்கிறது. மேலும் அதன் நேரடி நன்மைகள் பூா்வாஞ்சல் குடியிருப்பாளா்கள் வசிக்கும் காலனிகளின் வளா்ச்சியில் காணப்படுகின்றன.
சமீபத்தில் யமுனை நதிக்கரையில் சத் பூஜை என்ற தீா்மானத்தை நிறைவேற்றியதன் மூலம், ஆட்சிக்கு வந்த பிறகு பூா்வாஞ்சல் சமூகத்திற்கு பாஜக ஒரு பழைய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது’ என்று அவா் கூறினாா்.
மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, எம்.எல்.ஏ. அபய் வா்மா மற்றும் நீலம் பெஹல்வான் ஆகியோருடன் திச்காவோன் காலன் வாா்டில் நடந்த பன்னா பிரமுக் மாநாட்டில் உரையாற்றினாா். பிற்பகலில், நாராயணா வாா்டில் மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளின் மாநாட்டில், எம்எல்ஏ உமாங் பஜாஜ் மற்றும் மாவட்டத் தலைவா் வீரேந்திர பப்பா் ஆகியோருடன் பங்கேற்றாா் அமைச்சா்.
