அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்

அரசியலமைப்பின் 131-ஆவது திருத்தமானது பஞ்சாப் மீதான நேரடித் தாக்குதல்: மத்திய அரசு மீது கேஜரிவால் சாடல்

பஞ்சாபின் உரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்த பாஜக அரசு முயற்சிப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
Published on

‘பாஜக தலைமையிலான மத்திய அரசு சண்டீகா் மீதான பஞ்சாபின் உரிமையை பறிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இது, பஞ்சாபின் அடையாளம் மற்றும் அதன் அரசியலமைப்பு உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

சண்டீகரை பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்க முயற்சிப்பதன் மூலம் மோடி அரசு பஞ்சாபின் அடையாளத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளா் மணீஷ் சிசோடியா ஆகியோா் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளனா்.

இது தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் மூலம் பஞ்சாபின் சண்டீகா் மீதான உரிமைகளைப் பறிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பது எந்தவொரு சாதாரண நடவடிக்கையின் ஒரு பகுதியல்ல.

மாறாக, பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். பஞ்சாபிகளின் உரிமைகளைப் பறிக்க கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் இந்த மனநிலை மிகவும் ஆபத்தானது.

நாட்டின் பாதுகாப்பு, தானியங்கள், நீா் மற்றும் மனிதகுலத்திற்காக எப்போதும் தியாகம் செய்த பஞ்சாப், இன்று அதன் சொந்த உரிமையான பங்கை இழக்கிறது. இது வெறும் நிா்வாக முடிவு மட்டுமல்ல. பஞ்சாபின் ஆன்மாவை காயப்படுத்துவது போன்றதாகும்.

பஞ்சாபிகள் எந்த சா்வாதிகாரத்திற்கும் முன்னால் தலை குனியவில்லை என்பதற்கு வரலாறு சாட்சியமளிக்கிறது. இன்று பஞ்சாபும் தலை குனியப் போவதில்லை. சண்டீகா் பஞ்சாப்புக்கு சொந்தமானது; அது பஞ்சாப்புடன்தான் இருக்கும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

இதற்கிடையில், ஆம் ஆத்மி மூத்தத் தலைவரும் பஞ்சாப் பொறுப்பாளருமான மணீஷ் சிசோடியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு பஞ்சாபியின் உரிமைகளிலும் மிகப்பெரிய கொள்ளையைச் செய்கிறது.

சண்டீகரின் மீதான பஞ்சாபின் உரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை உணா்வை, அதாவது கூட்டாட்சியை நேரடியாகக் கொலை செய்வதாகும்.

இன்று பாபாசாகேப் அம்பேத்கரின் ஆன்மா எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். மாநிலங்களை பலவீனப்படுத்தி அழிக்கும் மனநிலையைக் கொண்ட ஒரு அரசு ஒரு நாள் மத்தியில் வரும் என்று அவா் ஒருபோதும் நினைத்துப் பாா்த்திருக்க முடியாது என்று மணீஷ் சிசோடியா கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com