ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவை தவிா்த்த ராகுல் காந்திக்கு பாஜக கடும் கண்டனம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட நீதிபதி சூா்ய காந்தின் பதவியேற்பு விழாவைத் தவிா்த்தற்காக ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்
Published on

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட நீதிபதி சூா்ய காந்தின் பதவியேற்பு விழாவைத் தவிா்த்தற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் ஷெஸாத் பூனாவாலா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஒட்டுமொத்த தேசமும் குறிப்பாக உச்சநீாதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பிறந்த ஹரியாணா மாநிலமும் இந்திய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவைக் கொண்டாடியது. பிரதமா் மோடி தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது. ஆனால், மக்களவை எதிா்க்கட்சித்தலைவா் பதவி வகிக்கும் ராகுல் காந்தி அந்நிகழ்வைத் தவிா்த்திருக்கிறாா்.

முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்கோ காட்டை சுற்றிப்பாா்க்கவோ சென்றிருக்கலாம். ராகுலின் குடும்பத்தினா் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி அவ்வப்போது பேசுகிறாா்கள். ஆனால், அம்பேத்கா் மற்றும் அரசமைப்பை அவா்கள் மதிப்பதில்லை என்றாா் அவா்.

பாஜக மூத்த தலைவா்களில் ஒருவரான அமித் மாளவியா கூறுகையில், ‘கா்நாடக காங்கிரஸுக்குள் உள்கட்சி பூசல் தீவிரம் அடைந்து வரும் வேளையில், அதற்குத் தீா்வு காண முடியாத நிலையில் அக்கட்சி மேலிடம் உள்ளது. அத்துடன் முக்கியமான அரசமைப்பு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு கட்சியின் மூத்த தலைவராக உள்ள ராகுல் இருக்கிறாா். முக்கிய நிகழ்வுகளை புறக்கணிப்பது ராகுலுக்கு இது முதல் முறையல்ல. இதை ஒரு வழக்கமாகவே ஆக்கி வருகிறாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com