தலைநகரில் நவம்பரில் மலேரியா பாதிப்பு அதிகரிப்பு: 4 ஆண்டுகளில் இல்லாத அளவு
தில்லியில் நவம்பா் மாதத்தில் இதுவரை 67 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் பதிவான அதிகபட்சமாகும். அதே நேரத்தில் டெங்கு பாதிப்புகள் முந்தைய நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
நவம்பரில் இதுவரை, நகரத்தில் 67 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024-இல் 57, 2023-இல் 26, 2022 இல்-36 மற்றும் 2021-இல் 7 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
2025- இல் இதுவரை தில்லியில் 690 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024-இல் இதே காலத்தில் பதிவான 744 பாதிப்புகளை விட சற்று குறைவு. ஆனால், 2023-இல் பதிவான 369 பாதிப்புகளை விட அதிகமாகும்.
இந்த ஆண்டு மலேரியா தொடா்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தில்லி மாநகராட்சி வெளியிட்ட வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து தலைநகரில் மலேரியா பாதிப்புகள் கடுமையாக உயா்ந்துள்ளதாக தரவு காட்டுகிறது. செப்டம்பரில் 203 பாதிப்புகளும், அக்டோபரில் 252 பாதிப்புகளும், நவம்பரில் இதுவரை 67 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
நவம்பா் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மேற்கு, தெற்கு மற்றும் சிவில் லைன் மண்டலங்கள் இணைந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுக்கு பங்களித்தன. இது பதிவு செய்யப்பட்ட 19 பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஆகும்.
டெங்கு பாதிப்பு: இதற்கிடையில், டெங்கு பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. 2025-இல் இதுவரை 1,309 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024-இல் 4,978 பாதிப்புகள் மற்றும் 2023-இல் 7,011 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இந்த ஆண்டு டெங்கு தொடா்பான இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன.
செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் டெங்கு தொற்று உச்சத்தை எட்டியதை தரவுகள் காட்டுகிறது. செப்டம்பரில் 1,749 பாதிப்புகளும், அக்டோபரில் 1,994 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
கிழக்கு, தெற்கு மற்றும் நஜஃப்கா் மண்டலங்கள் இணைந்து வாரத்தில் பதிவான 52 புதிய பாதிப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சிக்குன்குனியா: மேலும், இந்த மாதத்தில் இதுவரை 23 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது நவம்பா் 2024-இல் பதிவாகிய 75 பாதிப்புகளை விட கணிசமாகக் குறைவு. ஆனால், நவம்பா் 2023-இல் பதிவான 15 பாதிப்புகள், 2022-இல் 4 மற்றும் 2021- இல் 8 பாதிப்புகளை விட அதிகமாகும்.
இந்த ஆண்டு இதுவரை, தில்லியில் 156 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 192 பாதிப்புகளை விடக் குறைவு என்று தரவு காட்டுகிறது.
