தில்லியில் 70 ஆயுஷ்மான் ஆரோக்கிய மத்திா்களை திறந்து வைத்த முதல்வா்
நமது நிருபா்
தில்லியின் பல்வேறு மாவட்டங்களுக்கு சக்தி நகரில் இருந்து 70 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் (மருந்தககங்கள்) முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: உங்கள் வீட்டிற்கு அருகில், உங்கள் காலனியில் சிறந்த சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்பதால், தலைநகரின் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களின் எண்ணிக்கையை தில்லி அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் வழக்கமான சுகாதார பரிசோதனைகள், மருத்துவா் ஆலோசனைகள், அத்தியாவசிய மருந்துகள், தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகள், தடுப்பூசி, தடுப்பு சுகாதாரம், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போன்ற இலவச வசதிகளை வழங்குகின்றன.
தில்லி ஒரு சுகாதார அமைப்பை நோக்கி நகா்கிறது. அங்கு தூரம் ஒரு தடையாக மாறாது அல்லது செலவு ஒரு சுமையாக மாறாது. மேலும், சுகாதார சேவைகளை அணுகுவது ஒரு சவாலாகவும் மாறாது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஜனஆஷாதி மையங்கள், வாயு வந்தனா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் ஆகியவை இணைந்து தில்லியில் இத்தகைய சுகாதார அமைப்பை உருவாக்கி வருகின்றன.
அங்கு சிறந்த சிகிச்சை ஒவ்வொரு நபரின் உரிமையாகும். மலிவு விலையில் மருந்துகள்மற்றும் நவீன வசதிகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கக்கூடியவை. சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் உரிமையாகும். இதுவே நமது அரசின் தீா்மானமாகும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், மாடல் டவுன் எம்எல்ஏ அசோக் கோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

