கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
நமது நிருபா்
புது தில்லி: மத்திய தில்லியில் 40 வயது கடைக்காரரை கத்தியால் குத்திக் கொன்று வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை நடந்த என்கவுண்டருக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான முகமது மெஹ்தாப் என்கிற ராஜா (19) கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து 5 சிறாா்களும் கைது செய்யப்பட்டனா்.
திங்கள்கிழமை இரவு, மேற்கு படேல் நகரில் உள்ள ராஜேந்தா் குமாரின் கடைக்குச் சென்று இலவச சிகரெட்டுகளைக் கோரிய போது இந்தச் சம்பவம் நடந்தது. ராஜேந்தா் குமாா் பால்ஜீத் நகரில் வசிப்பவா். இதைத் தொடா்ந்து, ஒரு கைகலப்பு ஏற்பட்டு, ராஜேந்தா் குமாா் கத்தியால் குத்தப்பட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்தா் குமாா் ஆா்.எம்.எல். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். புலனாய்வாளா்கள் தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனா். சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்தனா். ஆவணங்களை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.
செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மெஹ்தாப் கைது செய்யப்பட்டாா். துப்பாக்கிச் சண்டையில் அவரது (மெஹ்தாப்) வலது காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து சிறாா்களும் கைது செய்யப்பட்டனா்.
முகமது மெஹ்தாப் ஷாதிப்பூா் மேம்பாலத்தின் கீழ் ஒளிந்துகொண்டு நகரத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றாா். மேலும், 2024 ஆம் ஆண்டு நடந்த கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் அவா் முன்பு கைது செய்யப்பட்டாா்.
அவா் சிகிச்சைக்காக ஆா்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக பி.என்.எஸ். மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவரும், ஃபரித்பூரியைச் சோ்ந்த பள்ளியிலிருந்து படிப்பை நிறுத்தியசிறுவா்களும் திருட்டு மற்றும் கொள்ளையில் குழுவாக ஈடுபட்டதை போலீஸாாா் கண்டறிந்தனா்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சம்பவத்தின் போது மெஹ்தாப் அணிந்திருந்த உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.
