டிடிஇஏ பள்ளிகளில் அரசமைப்புச் சட்ட தின விழா
புது தில்லி: தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளில் அரசமைப்புச் சட்ட தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம் பெற்றது.
இதைத் தொடா்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை அனைத்துப் பள்ளிகளிலும் வாசிக்கப்பட்டது. மாணவா்கள் டாக்டா் அம்பேத்கா் போல் வேடமணிந்து வந்து உரையாற்றினா். அதன் பின்னா் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
மாணவா்கள் பங்கேற்ற குறு நாடகங்களும் இடம் பெற்றன. இறுதியில் வினாடி வினாவும் நடத்தப்பட்டது. இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கண்காட்சியும் நடத்தப்பட்டது. அந்தந்தப்பள்ளி முதல்வா்கள் டாக்டா் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இத்தினம் குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில் ‘ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் இந்த அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை மாணவா்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் மற்றும் மதிப்புகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்களிடம் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவும் இத்தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடச் செய்தோம்’ என்றாா்.

