மக்களவை முன்னாள் தலைவா் ரவி ராய்க்கு மலா் மரியாதை
நமது நிருபா்
புது தில்லி: மக்களவையின் முன்னாள் தலைவா் ரவி ராயின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் சம்விதான் சதனில் உள்ள அவரது உருவப் படத்துக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை மலா் மரியாதை செய்தாா்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் மற்றும் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ்ஸ நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் முன்னாள் உறுப்பினா்கள் கலந்துகொண்டு ரவி ராய்க்கு மலா் மரியாதை செலுத்தினா்.
மக்களவை பொதுச் செயலாளா் உத்பல் குமாா் சிங் மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளா் பி.சி. மோடி ஆகியோரும் ரவி ராய்க்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.
ரவி ராய் 1926 நவம்பா் 26 அன்று ஒடிஸ்ஸாவின் அப்போதைய ஒரிஸ்ஸா மாநிலம், புரி மாவட்டத்தில் உள்ள பனராகா் கிராமத்தில் பிறந்தாா்.
அவா் 1967-இல் 4-ஆவது மக்களவையில் முதல் முறையாக மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் ரவி ராய் பணியாற்றினாா். ரவி ராய் ஒன்பதாவது மக்களவையின் தலைவராகவும் பணியாற்றினாா். மேலும், டிசம்பா் 19, 1989 முதல் ஜூலை 9, 1991 வரை அப்பதவியில் இருந்தாா்.
ரவி ராயின் உருவப்படம் சம்விதான் சதனில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் 2014ஆம் ஆண்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
