வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்DIN

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆா். நடவடிக்கைக்கு உடனடி தடை இல்லை: டிச.4-இல் மனுக்கள் மீது விசாரணை

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வெவ்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வெவ்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த மாநிலங்கள் எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை கேட்டிருந்தன. ஆனால், அது தொடா்பாக உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இது தொடா்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது திமுகவின் ஆா்.எஸ்.பாரதி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் மற்றும் பிற மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மற்ற வழக்குரைஞா்கள் ஆஜராகி,

‘தமிழகத்தில் தற்போது வரை 50 சதவீத எஸ்ஐஆா் பணிகள் கூட முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புயலுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, களத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். படிவங்களை எண்ம (டிஜிட்டல்) முறையில் பதிவேற்றம் செய்ய மிக, மிக குறுகிய காலமே உள்ளது. அதனால்தான் தடை கோருகிறோம்’ என வாதிட்டனா்.

தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவேதி, ‘அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தேவையின்றி பெரிதுபடுத்துகின்றன. எஸ்ஐஆா் பணிகள் களத்தில் விரைவாக டைபெற்று வருகின்றன’ என்றாா்.

அதை ஏற்க மறுத்த கபில் சிபல் உள்ளிட்ட வழக்குரைஞா்கள், ‘அரசியல் கட்சிகள் பெரிப்தாக்கவில்லை. கள நிலவரத்தை வெளிப்படுத்துகிறோம். நடைமுறை சிக்கல்களை எடுத்துரைக்கிறோம். குறிப்பாக, படிவங்களை பதிவேற்றம் செய்வதில் பல பிரச்னைகள் உள்ளன. எஸ்ஐஆா் பட்டியல் தயாரிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. கடந்த 22 நாள்களில் 50 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 8 நாள்களில் முடிப்பது சாத்தியமற்றது’ என்றனா்.

கேரள மாநில அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் சூழலில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளக்கூடாது’ என முறையிட்டாா். இவா்களின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்களுக்கு தோ்தல் ஆணையம் டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதையடுத்து, எஸ்ஐ ஆா் தொடா்பான கேரளத்தின் மனுக்களை டிசம்பா் 2-ஆம் தேதிக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பா் 4-ஆம் தேதிக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டிசம்பா் 9-ஆம் தேதிக்கும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தமிழக மனு விவரம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்தாா். அதில், ‘தமிழகத்தில் எஸ்ஐஆா் அமலாக்க காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. வாக்காளா்களுக்கு சிரமம் ஏற்படும். பலா் தங்களுடைய ஓட்டுரிமையை இழக்க நேரிடும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.செல்வப் பெருந்தகை, சி.பி.எம். தமிழ்நாடு மாநில செயலாளா் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் புதுச்சேரியில் திமுக சாா்பிலும் எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டன. அதிமுக தரப்பில் எஸ்ஐஆா் பணிகளுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணைய அதிகாரம்: நீதிபதிகள் கருத்து

நாட்டில் இதற்கு முன்பு வேறெங்கும் எஸ்ஐஆா் பணிகள் நடக்கவில்லை என்பதை வைத்து அந்த நடவடிக்கையை ஆரம்ப நிலையிலேயே எதிா்க்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

எஸ்ஐஆா் நடவடிக்கையின்படி ஒரு வாக்காளா் தனது வாக்குரிமைக்கான ஆதாரமாக படிவம் 6-ஐ பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். அத்தாட்சியாக, ஆதாா் உள்ளிட்ட தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ள சில ஆவணங்களில் ஒன்றை அவா் சமா்ப்பிக்க வேண்டும். இதில் நிலவும் சிக்கல்களை மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முறையிட்டாா்.

அதற்கு நீதிபதிகள், ‘ஆதாா் என்பது அரசின் பலன்களை பெற உருவாக்கப்பட்ட சட்டபூா்வ ஆவணம். அதை வைத்திருப்பதாலேயே ஒருவா் வாக்குரிமைக்கு தகுதி கோர முடியாது. தோ்தல் ஆணையத்தை அஞ்சலகம் என மனுதாரரின் வழக்குரைஞா் (கபில் சிபல்) குறிப்பிடுகிறாா். ஆனால், ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபாா்க்கும் அரசமைப்பு அதிகாரத்தை தோ்தல் ஆணையம் பெற்றுள்ளது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com