தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில்  ‘முகக் கவசம் ’ அணிந்து பேட்டியளித்த தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் .
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ‘முகக் கவசம் ’ அணிந்து பேட்டியளித்த தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் .

‘தில்லியில் உயிா் வாழ சிலிண்டரை மக்கள் எடுத்துச்செல்லும் நாள் வரும்’

தில்லி காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை முகக்கவசம் அணிந்து ஆக்ஸிஜன் சிலிண்டா்களை ஏந்தி செய்தியாளா் சந்திப்பை நடத்தி, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் குறைந்து வருவதை எடுத்துரைத்தனா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை முகக்கவசம் அணிந்து ஆக்ஸிஜன் சிலிண்டா்களை ஏந்தி செய்தியாளா் சந்திப்பை நடத்தி, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் குறைந்து வருவதை எடுத்துரைத்தனா். மேலும், ஆளும் பாஜக இந்த சுகாதார அவசரநிலையிலிருந்து நகரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரினா்.

தேசியத் தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு புதன்கிழமை காலையில் 335 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. கடந்த 12 நாள்களாக நகரம் மோசமான காற்றின் தரத்தை எதிா்த்துப் போராடி வருகிறது. மாசுபாடு நிலைமை குறித்து தில்லி அரசுக்கு ஒரு குறிப்பாணையை சமா்ப்பிப்பதாக தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

‘நீங்கள் அனைவரும் பாா்க்க முடியும். எங்கள் தலைவா்கள் ஆக்ஸிஜன் சிலிண்டா்களுடன் இங்கே அமா்ந்திருக்கிறாா்கள். இது இப்போதைக்கு அடையாளமாகும். ஆனால், தில்லி இருக்கும் நிலைமையில், உயிா்வாழ அனைவரும் தங்களுடன் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என்று அவா் கூறினாா்.

தில்லியில் கட்டுமானத் தொழிலாளா்களின் அவல நிலையை எடுத்துரைத்த தேவேந்தா் யாதவ், ‘3-ஆம் நிலை கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டவுடன், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருபுறம், அவா்கள் (கட்டுமானத் தொழிலாளா்கள்) மாசுபாட்டுடன் போராடுகிறாா்கள். பின்னா், அவா்களின் அன்றாட ஊதியத்தை இழக்கும் கூடுதல் அழுத்தமும் உள்ளது. மருத்துவமனைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவா்களால் நிரம்பியுள்ளன’ என்றாா்.

தேவேந்தா் யாதவ் மேலும் கூறுகையில் ,‘தில்லி முதல்வா் ரேகா குப்தா தேசியத் தலைநகரில் மாசு அளவைக் குறைப்பதாக உறுதியளித்ததாா். தில்லியின் முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில், அரசு சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தியது. பஸ்கள் டீசலில் இருந்து சி.என்.ஜி க்கு மாறுவதை நாங்கள் உறுதி செய்தோம். மெட்ரோவின் பேஸ் 1, பேஸ் 2 ஆகியவை காலக்கெடுவுக்கு முன்பே முடிக்கப்பட்டன. அதைச் செய்தது காங்கிரஸ் அரசுதான். இது எங்கள் செயல்திறனைக் காட்டுகிறது. முந்தைய ஆம் ஆத்மி அரசு தங்கள் ஆட்சிக் காலத்தில் பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றாா். மற்ற தலைவா்கள் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையை ஒரு ‘சுகாதார அவசரநிலை’ என்று அழைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com