தில்லி விமான நிலைய சரக்குப் பகுதியில் ஐஃபோன்கள் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தில்லி விமான நிலைய சரக்குப் பகுதியில் ஐஃபோன்கள் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

துபை செல்லும் கைப்பேசிகளின் சரக்குப் பெட்டியில் இருந்து ஐஃபோன்களைத் திருடியதாக 36 வயது லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலைய சரக்குப் பகுதியில், துபை செல்லும் கைப்பேசிகளின் சரக்குப் பெட்டியில் இருந்து ஐஃபோன்களைத் திருடியதாக 36 வயது லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (ஐஜிஐ விமான நிலையம்) விசித்ரா வீா் கூறியதாவது:

தில்லி பாலம் கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட சுனில் குமாா் (36), 148 சாதனங்கள் கொண்ட சரக்குப் பெட்டியில் இருந்து மூன்று ஐஃபோன்களைத் திருடியுள்ளாா்.

அவரும் அவரது கூட்டாளியும் தங்கள் டாக்ஸி பயணத்திற்கு பணம் செலுத்த முடியாததால், டாக்ஸி ஓட்டுநருக்கு ஒரு ஐஃபோனை கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தில் இயங்கும் ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் குமாா், அவரது கூட்டாளியான விக்கி என்கிற லாலாவுடன் சோ்ந்து இந்த ஐஃபோன்களைத் திருடினா். அவரது கூட்டாளி தற்போது விக்கி தலைமறைவாக உள்ளாா்.

முன்னதாக, சரக்கு அனுப்பும் நிறுவனம் துபைக்கு அனுப்பப்பட்ட 148 சாதனங்கள் கொண்ட சரக்கில் இருந்து மூன்று ஐஃபோன்கள் திருடப்பட்டதாகப் புகாரளித்தது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

திருடப்பட்ட ஒரு ஐஃபோன் ஹரியாணாவின் சோனிபட்டில் உள்ள டாக்ஸி ஓட்டுநரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு அவரது வாகனத்தில் பயணம் செய்ததற்கு பணம் செலுத்தத் தவறிய குடிபோதையில் இருந்த பயணிகள் இருவா் தனக்கு இந்த ஐஃபோனை கொடுத்ததாக டாக்ஸி ஓட்டுநா் போலீஸாரிடம் கூறினாா்.

ரூ.5,000 பயணக் கட்டணத்திற்காக கைப்பேசியை வாங்கிக் கொண்டு கூடுதலாக ரூ.15,000 அவா்களிடம் ஓட்டுநா் கொடுத்துள்ளாா். பாலம் கிராமத்தில் இருந்து மற்றொரு ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,

குமாா் அடையாளம் காணப்பட்டு செப்டம்பா் 26 அன்று கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

காணாமல் போன மூன்றாவது ஐஃபோன் பாலத்தில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. குமாா் கடந்த காலங்களில் 10 திருட்டு, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com