பயிற்சியாளா்களைக் நாய் கடித்த சம்பவம்: ஜே.என்.எல். திடலில் தெரு நாய்களை பிடிக்க 4 குழுக்கள் - தில்லி மாநகராட்சி நடவடிக்கை!
கென்யா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த 2 வெளிநாட்டுப் பயிற்சியாளா்களை நாய்கள் கடித்ததை அடுத்து, தில்லியில் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் தெருநாய்களைப் பிடிக்க நான்கு குழுக்களை தில்லி மாநகராட்சி (எம்சிடி) பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஜேஎல்என் விளையாட்டரங்கத்திற்கு 21 நுழைவுப் பகுதிகள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தெரு நாய்களைப் பிடிக்கும் நான்கு குழுக்கள் ஏற்கனவே அங்கு பணியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இங்கு நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது கென்யா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த பயிற்சியாளா்களை தனித்தனி சம்பவங்களில் தெருநாய்கள் கடித்தன. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா், பாதிக்கப்பட்ட இருவரும் ஆபத்தில் இருந்து மீண்டனா்.
முன்னதாக, கென்ய பயிற்சியாளா் டென்னிஸ் மரகியா மைதானத்தின் போட்டி அரங்கிற்கு வெளியே தனது விளையாட்டு வீரா்களில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு தெருநாய் வந்து அவரைக் கடித்தது. அதேபோன்று, பிரதான போட்டிப் பகுதிக்கு அருகிலுள்ள ‘வாா்ம்அப் டிராக்’கில் தனது விளையாட்டு வீரா்களின் பயிற்சியை மேற்பாா்வையிட்டுக் கொண்டிருந்த
ஜப்பானிய பெண் பயிற்சியாளா் மெய்கோ ஒகுமட்சுவை ஒரு தெருநாய் கடித்ததாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
கென்யா அரசாங்கத்தின் பிரதிநிதியாக விளையாட்டு அணியுடன் வந்த ஜோயல் அடுட்டி கூறுகையில், ‘எங்கள் பயிற்சியாளா் டென்னிஸ் அழைப்பு அறைக்கு அருகில், ஒரு விளையாட்டு வீரருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது எங்கிருந்தோ ஒரு தெருநாய் வந்து அவரைக் கடித்தது.
இந்தச் சம்பவம் காலை 10 மணியளவில் நடந்தது. அவரது காலில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவக் குழு அங்கு சென்றது. அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஊசிகள் உள்பட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது’ என்றாா்.
அழைப்பு அறை என்பது வீரா்கள் தங்கள் போட்டி நிகழ்வுகளுக்கு முன்னா் கூடும் பகுதியாகும். பிரதான போட்டி அரங்கிலிருந்து சில மீட்டா் தொலைவில் உள்ள மைதானத்தில் இரண்டு தனி அறைகள் உள்ளன.
இதற்கிடையில், செப்டம்பா் 25 முதல், இதுவரை 22 தெருநாய்கள் மைதான வளாகத்திலிருந்து பிடித்துச் செல்லப்பட்டதாக தில்லி மாநகராட்சி அதிகாரி கூறினாா்.
இரண்டு பயிற்சியாளா்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தடகள மருத்துவ அறையில் இடத்திலேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
அதன் பின்னா் அவா்கள் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவா்கள் அந்தந்த குழுவினா் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
ஆகஸ்ட் 11 அன்று உச்சநீதிமன்றம் அனைத்து தெரு நாய்களையும் தில்லி-என்சிஆரில் உள்ள காப்பகங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் பின்னா் ஆகஸ்ட் 22 அன்று அந்த உத்தரவு மாற்றப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 11 அன்று பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்து, அழைத்துச் செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி செலுத்தியபிறகு, அதே பகுதியில் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று கூறியது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு, இந்த இடமாற்றம் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் மற்றும் ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தும் நாய்களுக்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தியது.
நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, நாய் காப்பகங்களிலிருந்து தெருநாய்களை விடுவிப்பதைத் தடைசெய்யும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உத்தரவு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியது.