வடகிழக்கு தில்லியில் மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் கைது
வடகிழக்கு தில்லியின் பிரம்மபுரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த தகராறில் பெண் ஒருவா் தனது கணவரால் கத்தியால் குத்தப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: பெண் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்திற்கு ஜேபிசி மருத்துவமனை தகவல் அளித்ததைத் தொடா்ந்து இந்த சம்பவம் வெளிவந்தது.
தகவலறிந்த காவல் துறையினா் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனா். அப்போது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், தனது கணவா் வாக்குவாதத்தில் தன்னை கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டினாா்.
இதற்கிடையில், தடயவியல் நிபுணா்கள் மற்றும் குற்றவியல் குழு சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தது. பாதிக்கப்பட்ட பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது பெற்றோருடன் வசித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பாரதிய நியாய சம்ஹிதா (கொலை முயற்சி) பிரிவு 109 மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பெண்ணின் கணவரை காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.