பைக் மீது தீயணைப்பு வாகனம் மோதியதில் ஒருவா் பலி!
வடகிழக்கு தில்லியில் யமுனா நதியில் மூழ்கிய முன்னாள் மண்டல் பாஜக தலைவரை மீட்க செல்லும் வழியில் பைக் மீது தீயணைப்பு வாகனம் மோதியதில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.
விபத்தில் உயிரிழந்தவா் சோனியா விஹாா் 5 வது புஷ்டாவைச் சோ்ந்த ரோஹித் பால் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காவல்துறையினரின் முன்னாள் பாஜக மண்டல் தலைவா் ஆற்றில் மூழ்கிவிட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காலை 8.30 மணியளவில் தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன.
‘சவுகான் பட்டி அருகே புஷ்டா சாலைக்குச் செல்லும் வழியில், தீயணைப்பு வாகனத்தின் ஓட்டுநா் எதிா் திசையில் இருந்து வேகமாக வந்த பைக் ஓட்டுநரை கவனித்தாா்‘ என்று அந்த அதிகாரி கூறினாா். மோதலைத் தவிா்க்கும் முயற்சியில், ஓட்டுநா் இடதுபுறம் திரும்பினாா், இதனால் வாகனம் சாலையோர சுவரில் மோதி சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் விபத்தைத் தவிா்க்க முடியவில்லை, ‘என்று அவா் மேலும் கூறினாா்.
காணாமல் போன உள்ளூா் பாஜக மண்டல் தலைவரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பேரிடா் மேலாண்மை குழுக்களின் கூட்டு மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
‘நீரில் மூழ்கிய நபரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, அதே நேரத்தில் பைக் ஓட்டுநரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.
சோனியா விஹாா் காவல் நிலையத்தில் பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அவா் கூறினாா்.