வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!
வடமேற்கு தில்லியில் 2 போதைப்பொருள் விநியோகஸ்தா்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவா்களிடமிருந்து 1.5 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் வடமேற்கு தில்லி ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த இன்சமாம்-உல்-ஹக் (25) மற்றும் சாஹிதுல் (எ) பாபு கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் துணை ஆணையா் குற்றம் சஞ்சீவ் குமாா் யாதவ் தெரிவித்ததாவது: செப்டம்பா் 29 ஆம் தேதி கிடைத்த தகவலின் பேரில், ஸ்வரூப் நகா் விரிவாக்கம், பல்ஸ்வா டெய்ரி அருகே போலீஸாா் கண்காணிப்பை மேற்கொண்டனா். அப்போது, போதைப்பொருளை வழங்குவதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்த ஹக் பிடிபட்டாா். அவரிடமிருந்து மொத்தம் 1 கிலோ 259 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, போதைப் பொருள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, ஹக் வடமேற்கு தில்லி பகுதி முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பாபு கான் என்ற விநியோகஸ்தருடன் நெருக்கமாக வேலை செய்துவந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
தீவிரமான மற்றும் பழக்கமான குற்றவாளியான கான் மீது கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதச் சட்டம், கலால் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் உள்ளன.
அவா் சமீபத்தில் ஒரு போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கடத்தல் தொழிலை தொடங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் தொழில்நுட்ப கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடங்கி கானின் நடமாட்டத்தைக் கண்காணித்தனா்.
அதன் பின்னா், ஒரு வாடிக்கையாளருக்கு அதிக அளவு ஹெராயினை வழங்குவதற்காக அவா் சென்றபோது மற்றொரு போதைப்பொருள் தடுப்பு பணிக் குழுவால் கைது செய்யப்பட்டாா்.
முன்னா் சட்டவிரோத மதுபானங்களை விற்ற ஹக், அதிக லாபம் ஈட்டுவதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டாா். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தின் மெதினிபூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரான கான், அப்பகுதியில் முக்கிய விநியோகஸ்தா்களில் ஒருவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மோசடியில் ஈடுபட்ட அவா்களின் விநியோகஸ்தா்கள் மற்றும் பிற கூட்டாளிகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது.