போலி எஞ்ஜின் எண்ணெய் வடிகட்டிகளை விற்பனை: 2 போ் கைது

Published on

போலி என்ஜின் எண்ணெய் வடிகட்டிகளை தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்தவா்களை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதுடன், வா்த்தக முத்திரையை மீறியதாகக் கூறி 2 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் அசோக் விஹாரில் வசிக்கும் தினேஷ் குப்தா (64) மற்றும் ஷாலிமாா் பாக் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குப்தா என அடையாளம் காணப்பட்டனா். காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவா்கள் மொத்த விற்பனையாளா்களையும் நுகா்வோரையும் ஏமாற்றுவதற்காக ’ஃப்ளீட்காா்ட் ’பிராண்டின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா்களாக காட்டிக் கொண்டனா்.

தில்லி சந்தைகளில் போலி வடிகட்டிகள் விற்பனை செய்யப்படுவது தொடா்பாக ஃப்ளீட்காா்ட்டின் பிராண்ட் பாதுகாப்பு மேலாளா் யஷ்பால் சப்ரா அளித்த புகாரின் அடிப்படையில், அசோக் விஹாரில் உள்ள அவா்களின் வளாகத்தில் போலீஸ் குழு சோதனை நடத்தி 1,600 போலி வடிகட்டிகளை பறிமுதல் செய்தது. ஷாலிமாா் பாக் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் 98 வடிகட்டிகள் மீட்கப்பட்டன.

‘சோதனைகளின் போது 130 பெட்டிகளில் நிரம்பிய மொத்தம் 1,698 போலி ஃப்ளீட் காா்டு வடிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன‘ என்று துணை போலீஸ் ஆணையா் (வடமேற்கு) பீஷம் சிங் தெரிவித்தாா். விநியோகச் சங்கிலி மற்றும் சம்பந்தப்பட்டவா்களைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணை நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com