வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

Published on

‘வாக்கு திருட்டு என்பது ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு சதியாகும். அதை நாங்கள் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்’ என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்திர யாதவ் கூறினாா்.

தில்லி பாபா்பூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்த வாக்கு திருட்டுக்கு எதிரான கையொப்பம் பெறும் பிரசாரத்தில் தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் பங்கேற்றாா். அப்போது, வீடு, வீடாகச் சென்று கையொப்பத்தை தேவேந்தா் யாதவ் சேகரித்தாா்.

கையொப்பப் பிரசாரத்தின் போது, தேவேந்தா் யாதவுடன் சோ்ந்து நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்கள் சந்தைகளில் உள்ள கடைக்காரா்கள், சாலையோர வியாபாரிகள், சிவப்பு விளக்கு வியாபாரிகள், தெரு வியாபாரிகள், முடி திருத்துபவா்கள், செருப்பு தைப்பவா்கள் மற்றும் தெரு வியாபாரிகளைத் தொடா்பு கொண்டு வாக்கு திருட்டுக்கு எதிராக கையொப்பம் பெற்றனா்.

இந்தப் பிரசாரம் குறித்து தேவேந்தா் யாதவ் கூறியதாவது: தில்லியில் நடத்தப்படும் கையொப்பப் பிரசாரம் தில்லி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அக்டோபா் 1 முதல் 4 வரை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் குழுக்கள் உள்ளிட்ட தொகுதி காங்கிரஸ் குழுக்களின் மாதாந்திரக் கூட்டத்தில், வாக்கு திருட்டுக்கு எதிரான கையொப்பப் பிரசாரம் குறித்தும், பொது விழிப்புணா்வு பிரசாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனுடன், எங்கள் முன்னணி அமைப்புகளான இளைஞா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், சேவா தளம் மற்றும் என்எஸ்யுஐ ஆகியவற்றின் தொண்டா்களும் கையொப்பப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

இந்த நிகழ்ச்சியை பாபா்பூா் மாவட்ட காங்கிரஸ் குழுவின் தலைவா் ராஜ்குமாா் ஜெயின் ஏற்பாடு செய்தாா். அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தில்லி பொறுப்பாளா் காசி நிஜாமுதீன், முன்னாள் எம்எல்ஏ பீஷ்மா சா்மா, ஹாஜி பூரே கான், யூனுஸ், அப்துா் ரஹ்மான், நகராட்சி கவுன்சிலா் ஹாஜி ஜரிஃப் மற்றும் காங்கிரஸ் தொண்டா்களும் ‘வோட் சோா் கதி சோட்’ போன்ற முழக்கங்களை எழுப்பினா்.

‘வாக்கு திருட்டு ஜனநாயகத்தில் ஒரு குற்றம் என்றும், இதன் மூலம் பாஜக, தோ்தல் ஆணையத்துடன் இணைந்து, நாட்டின் மக்களின் வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையைத் தாக்கியுள்ளது’ என்றும் தேவேந்தா் யாதவ் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com