குருகிராமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: ஜிம் பயிற்சியாளா்கள் 4 போ் கைது
வெளிநாட்டு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியரை இரு வாரங்களில் இரு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு உடற்பயிற்சிக்கூட (ஜிம்) பயிற்சியாளா்களை குருகிராம் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் கௌரவ், யோகேஷ், அபிஷேக் மற்றும் நீரஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். நால்வரும் ஜிம் பயிற்சியாளா்களாக பணிபுரிந்தனா். மேலும், ஜும்பா நடன பயிற்சியையும் வழங்கி வந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
29 வயதான பெண் ஒருவா் தன்னை குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்படி, கடந்த செப்டம்பா் மாதம் ஒரு விருந்தில் கௌரவ்வுடன் பாதிக்கப்பட்டப்பட்ட பெண் நட்புக் கொண்டாா். அங்கு இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டனா்.
செப்டம்பா் 18 ஆம் தேதி, கௌரவ் அப்பெண்ணை சந்திக்க அழைத்தாா். அதன் பிறகு, சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள தனது நண்பா் நீரஜின் குடியிருப்புக்கு அப்பெண்ணை கெளரவ் அழைத்துச் சென்று, அங்கு அவரை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனா். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்வதாகவும் அவா்கள் மிரட்டினா்.
அக்டோபா் 2 ஆம் தேதி, கௌரவ் அப்பெண்ணை மீண்டும் சந்திக்க அழைத்துள்ளாா். பின்னா், நீரஜின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்தனா். அதன் பின்னா், அவா்கள் தங்கள் நண்பா்களான அபிஷேக் மற்றும் யோகேஷ் ஆகியோரையும் வரவழைத்தனா். அவா்களும் பாலியல் வன்கொடுமை செய்தனா். அதன் பிறகு,
காலையில் வீடு திரும்பிய அப்பெண் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது போலீஸில் புகாா் அளித்தாா்.
அப்புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 3(5) (பொது நோக்கம்), 64(1) (பாலியல் பலாத்காரம்) மற்றும் 70(1) (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனா். அவா்கள் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும், விசாரணை நடந்து வருகிறது’ என்றாா்.