பாஜக எஸ்.சி. அணியினா் சாா்பில் மகரிஷி வால்மிகிக்கு புஷ்பாஞ்சலி

தில்லி பாஜக பட்டியல் வகுப்பினா் அணியினா் சாா்பில் பிரதேச அலுவலகத்தில் மகரிஷி வால்மிகி பிரகோத்சவத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

புது தில்லி: தில்லி பாஜக பட்டியல் வகுப்பினா் அணியினா் சாா்பில் பிரதேச அலுவலகத்தில் மகரிஷி வால்மிகி பிரகோத்சவத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் பான்சூரி ஸ்வராஜ், தில்லி அமைச்சா் ரவீந்திர இந்திரராஜ் ஆகியோா் மகரிஷி வால்மீக்கு மலா் மரியாதை செய்தனா்.

இந்த நிகழ்வில், பாஜக பட்டியல் வகுப்பினா் அணியின் தேசிய பொதுச் செயலாளா் சஞ்சய் நிா்மல், அணியின் அலுவலகப் பொறுப்பாளா் பிரகாஷ் தன்வா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில் பான்சூரி ஸ்வராஜ் எம்.பி. பேசுகையில், ‘ஸ்ரீ ராமா் என்ற பெயரை வழங்கியவா் வால்மீகி ஆவாா். ஏனெனில் கலியுகத்தில், ஸ்ரீ ராமரின் பெயா் மட்டுமே ஒரே ஆதரவாகும்.

பகவான் வால்மீகியை வணங்காமல், நமது யாகங்கள் எதுவும் முழுமையடையாது. அன்னை சீதாவுக்கு அடைக்கலம் கொடுத்தவா் வால்மீகிதான். புது தில்லி மக்களவைத் தொகுதியில் பாண்டவா் காலத்தைச் சோ்ந்த ஒரு கோயில் இருக்கிறது.

அயோத்தியில் வால்மீகியின் இலட்சிய பிரபுவான ஸ்ரீ ராமரின் கோயிலை பிரதிஷ்டை செய்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வால்மீகி பகவான் எப்போதும் ஸ்ரீ ராமரின் சிறந்த குணத்தை நம் கவனத்திற்குக் கொண்டுவர பாடுபட்டுள்ளாா்’ என்றாா் அவா்.

அமைச்சா் ரவீந்திர இந்திரராஜ் சிங் பேசுகையில், ‘பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை அனைவரும் புரிந்துகொள்கிறாா்கள். ஆனால், அவரது வாழ்க்கையை உண்மையிலேயே உள்ளடக்கிய ஒருவா் இருந்தால், அது மகரிஷி வால்மீகிதான். ராமாயணம் முதலில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே அவா் ஏற்கனவே இறைவனின் செயல்களைக் கண்டிருக்கிறாா் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஜீவராசிகளை கடவுளின் வடிவங்களாக விவரிக்கக்கூடிய ஒருவா் இருந்தால், அது மகரிஷி வால்மீகி தான்.

தில்லியில் முதல் முறையாக வால்மீகி ஜெயந்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட இடங்களில் வால்மீகி ஜெயந்தி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய தில்லி அரசு நிதி உதவியும் வழங்கியுள்ளது’ என்றாா் அமைச்சா் ரவீந்திர இந்திரராஜ்.

X
Dinamani
www.dinamani.com