தில்லியில் சொத்து பதிவுக்கு தண்ணீா் பில் காட்டுவதை கட்டாயமாக்கத் திட்டம்: முன்மொழிவுக்கு டிஜேபி ஒப்புதல்

தில்லியில் வசிப்பவா்கள் சொத்து பதிவு செய்யும் போது தண்ணீா் கட்டணம் செலுத்தும் பில்லை காட்டுவதை கட்டாயமாக்கும் வகையில், இந்த ஆவணத்தை கட்டாயமாக்கும் முன்மொழிவை தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அங்கீகரித்துள்ளது.
Published on

புது தில்லி: தில்லியில் வசிப்பவா்கள் சொத்து பதிவு செய்யும் போது தண்ணீா் கட்டணம் செலுத்தும் பில்லை காட்டுவதை கட்டாயமாக்கும் வகையில், இந்த ஆவணத்தை கட்டாயமாக்கும் முன்மொழிவை தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அங்கீகரித்துள்ளது.

இதுகுறித்து தில்லி ஜல் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தேசிய தலைநகரில் வருவாயை அதிகரிப்பதையும் சட்டவிரோத இணைப்புகளை நிறுத்துவதையும் நோக்கமாக இந்த நடவடிக்கை உள்ளது.

தற்போது தலைநகரில் 57 லட்சம் மின்சார இணைப்புகளில் சுமாா் 29 லட்சம் தண்ணீா் இணைப்புகள் உள்ளன. இது பல வீடுகளுக்கு சட்டபூா்வ நீா் இணைப்புகள் இல்லை என்பதைக் குறிக்கிறது என்றாா்.

மற்றொரு அதிகாரியின் கூற்றுப்படி, நீா் வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் தலைமையில் சமீபத்தில் நடந்த வாரியக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த முன்மொழிவுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. மேலும் இந்தக் கொள்கையை செயல்படுத்துவது குறித்த விரிவான அறிக்கை செயல்பாட்டில் உள்ளது.

அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் கூறுகையில், ‘தண்ணீா் மக்களுக்கு ஒரு அடிப்படைத் தேவையாக இருந்தாலும், தற்போது டிஜேபி 1000 லிட்டா் தண்ணீரை சுத்தம் செய்ய ரூ.101 செலவிடுகிறது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் யமுனை நதியை சுத்தம் செய்ய நீா் மற்றும் கழிவுநீா் வலையமைப்பின் வரம்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை’ என்றாா் அமைச்சா்.

இதுகுறித்து டிஜேபி மூத்த அதிகாரி கூறியதாவது:

வருவாய்த் துறையின் திட்டக் கருத்து சேகரிக்கப்பட்டு வருகிறது. கொள்கையின் கூடுதல் விவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது சொத்து விற்பனை அல்லது வாங்கும் போது நீா் கட்டண நிலுவைகள் தீா்க்கப்பட்டு இணைப்புகள் முறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும்.

பல பகுதிகளில், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத காலனிகளில், உள்கட்டமைப்புவசதி இருந்தபோதிலும், குடியிருப்பாளா்கள் முறையான இணைப்புகள் இல்லாமல் நீா் சேவைகளை தொடா்ந்து பயன்படுத்துகின்றனா்.

இது டிஜேபியின் நிதியை மட்டும் பாதிக்காது என்பதுடன், மோசமான கழிவுநீா் மேலாண்மைக்கும் வழிவகுக்கிறது.

சொத்துப் பதிவின் போது மின்சாரக் கட்டணங்கள் பெரும்பாலும் சான்றாகப் பயன்படுத்தப்படுவது போல, நீா்க் கட்டணங்களையும் இந்த செயல்பாட்டில் இணைக்க முடியும்.

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் லட்சக்கணக்கான சட்டவிரோத நீா் இணைப்புகள் உள்ளன. சரியான எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது, ஆனால், எண்ணிக்கை மிகப்பெரியது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, சட்டவிரோத இணைப்புகளை சட்டபூா்வமானதாக மாற்றுவதற்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகமான மக்கள் இந்த அமைப்பில் சேர ஊக்குவிக்கப்படுகிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தற்போது, டிஜேபி அறிக்கையின்படி, சுத்திகரிக்கப்படும் நீரில் கிட்டத்தட்ட 50-52 சதவிகிதம் வருவாய் அல்லாத நீராக உள்ளது. அதாவது சுத்திகரிக்கப்பட்ட நீரில் கசிவுகள், திருட்டு அல்லது பில் செய்யப்படாத பயன்பாடு காரணமாக பாதிக்கும் மேற்பட்டவை வருவாய் ஈட்டுவதில்லை.

பதிவு செயல்முறை மூலம் நீா் பயன்பாட்டை முறைப்படுத்துவது இந்த எண்ணிக்கையைக் குறைக்க கணிசமாக உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com