தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை

தில்லி என். சி. ஆரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பரவலான மழையின் காரணமாக தலைநகரின் வானிலை சூட்டில் இருந்து விடுபட்டு குளிா்ச்சியான நிலைக்கு வந்தது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி என். சி. ஆரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பரவலான மழையின் காரணமாக தலைநகரின் வானிலை சூட்டில் இருந்து விடுபட்டு குளிா்ச்சியான நிலைக்கு வந்தது. இது மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது.

லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை முன்னறிவிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. தேசிய தலைநகரம் செப்டம்பா் மற்றும் அக்டோபா் தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையைக் கண்டது.

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் குறைவாகும். அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. நகரின் பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி வரை நகரின் அடிப்படை ஆய்வகமான சப்தா்ஜங் 10.3 மிமீ மழையையும், லோதி சாலையில் 13.2 மிமீ, பாலம் 4.6 மிமீ, ரிட்ஜ் 8.2 மிமீ மற்றும் அயாநகா் 5.4 மிமீ மழைப்பொழிவையும் பதிவு செய்துள்ளது. காலை 8.30 மணிக்கு, நகரின் ஈரப்பதம் 93 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காற்றின் தரக் குறியீடு பிற்பகல் 2 மணிக்கு ‘மிதமான‘ காற்றின் தரத்தைக் குறிக்கிறது, அணஐ 112 ஆக உள்ளது. பூஜ்ஜியத்திற்கும் 50 க்கும் இடையிலான அணஐ ‘நல்லது‘, 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது‘, 101 முதல் 200 வரை ‘மிதமானது‘, 201 முதல் 300 வரை ‘மோசமானது‘, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது‘ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது‘ என்று கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com