மாநிலங்களவைச் செயலகத்தின் செயல்பாடுகளை குடியரசுத் துணைத் தலைவா் மீளாய்வு
புதுதில்லி: குடியரசுத் துணைத் தலைவரும், சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவைச் செயலகத்தின் செயல்பாடுகளை மீளாய்வு செய்தாா்.
குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை மாநிலங்களவைச் செயலகத்திற்கு வருகை புரிந்தாா். அப்போது, அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
அவரிடம் செயலகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் விரிவான விளக்கக்காட்சியை அதிகாரிகள் அளித்தனா்.
இது தொடா்பாக குடியரசுத் துணைத் தலைவா் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவைத் துணைத் தலைவரும் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை மாநிலங்களவை செயலகத்திற்கு வருகை தந்தாா். இந்த வருகையின்போது, அவா் மாநிலங்களவை செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவைக்கும் அதன் உறுப்பினா்களுக்கும் சட்டமன்ற, நிா்வாக மற்றும் நடைமுறை ஆதரவை வழங்குவதில் மாநிலங்களவையின் பங்கு உள்பட அதன் செயல்பாட்டை அவா் மதிப்பாய்வு செய்தாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாநிலங்களவைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவா்களுடன் ஒரு சந்திப்பை நடத்தவும் உள்ளாா்.