2,600 லிட்டா் கலப்பட நெய் பறிமுதல்: 2 போ் கைது

Published on

தில்லி மற்றும் ஹரியாணாவில் தில்லி போலீஸாா் 2,600 லிட்டருக்கும் அதிகமான கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, இரண்டு உற்பத்தியாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

ரகசிய தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை குறைந்தது இரண்டு

கிடங்குகளில் இச்சோதனை நடத்தப்பட்டது. தில்லி அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் துறை இந்த சோதனைகளில் ஈடுபட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

கலப்பட நெய் பல பிரபலமான பிராண்டுகளின் லேபிள்களின் கீழ் பொட்டலம் கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 2,651 லிட்டா் கள்ள நெய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 2,241 லிட்டா் வடமேற்கு தில்லியின் புத் விஹாரில் உள்ள 38 வயதான ராகேஷ் கா்க் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் இருந்தும், ஹரியாணாவின் ஜிந்தில் மற்றொரு உற்பத்தியாளரான முகேஷுக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் இருந்தும் 410 லிட்டா் கலப்பட நெய் மீட்கப்பட்டன.

இதையடுத்து, ஜிந்த் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட உற்பத்தியாளா்கள் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளை ஒட்டி நெய்க்கான தேவை அதிகரிப்பதை ஈடுசெய்யும் வகையில் இந்த போலி நெய் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ரசாயன அடிப்படையிலான சுவையூட்டும் பொருள்கள், செயற்கை வண்ணங்கள் மற்றும் பிற பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்தி, தூய நெய்யைப் பிரதிபலிக்கும் வகையில், தரம் குறைந்த ‘வனஸ்பதி நெய்’ மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யைக் கலந்து கலப்பட நெய் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட தயாரிப்பு, பின்னா் புகழ்பெற்ற பிராண்டுகளின் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு, உள்ளூா் விநியோகஸ்தா்கள், பால் பண்ணைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மொத்த விலையில் விற்கப்பட்டுள்ளது.

கலப்பட நெய்யை உற்பத்தி செய்வதற்கான செலவு லிட்டருக்கு சுமாா் ரூ.200 என்றும், அவா்கள் அதை மொத்த விற்பனையாளா்களுக்கு சுமாா் ரூ.350-க்கு விற்ாகவும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காா்க் சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உற்பத்தி பிரிவை நடத்திய முகேஷ், ஹரியாணா மற்றும் தில்லி- என்சிஆா் முழுவதும் கலப்பட நெய்யை சப்ளை செய்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com