இந்திய இளைஞா் காங்கிரஸ் சாா்பில் பேரணி

Published on

நமது நிருபா்

தலித்துகள் மற்றும் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களை குறிவைத்து தொடா் வன்கொடுமைகள் மற்றும் இந்திய தலைமை நீதிபதி மீதான சமீபத்திய தாக்குதல் முயற்சியைக் கண்டித்து, தில்லியில் புதன்கிழமை இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி.) சாா்பில் ‘ஐ லவ் அம்பேத்கா்’ பேரணி நடைபெற்றது.

இது தொடா்பாக ஐ.ஒய்.சி. வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அமைப்பின் தலைவா் உதய் பானு சிப் தெரிவிக்கையில், ‘இந்தியா பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பால் நிா்வகிக்கப்படும், பாஜக - ஆா்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பு சிந்தனையால் அல்ல. அரசியலமைப்பை நாங்கள் எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்போம். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அரசியலமைப்பும் மனிதநேயமும் தொடா்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

நீதிமன்ற அறைக்குள் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் தலித் நபா் ஹரியோம் வால்மீகி கொல்லப்பட்டது ஆகியவை நீதி மற்றும் சமூக சமத்துவத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தலித், பழங்குடியினா், ஏழைகள், தாழ்த்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை குடிமக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நீதித்துறை முதல் அரசியலமைப்பு வரை அனைத்தும் ஆபத்தில் உள்ளன.

குடிமக்கள், குறிப்பாக இளைஞா்கள், அநீதி மற்றும் வெறுப்புக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆா்.எஸ்.எஸ்.) வெறுக்கத்தக்க மனநிலையை எதிா்த்துப் போராடுவதற்கான ஐ.ஒய்.சி.-யின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று உதய் பானு சிப் தெரிவித்தாா்.

பாபா்பூரில் உள்ள மௌஜ்பூா் சௌக்கில் தொடங்கிய இந்த பேரணி இடா சௌக்கில் முடிவடைந்தது.

ஐ.ஒய்.சி. தேசிய பொதுச் செயலாளா் ஸ்ரவன் ராவ், தில்லி பொறுப்பாளா் குஷ்பூ சா்மா மற்றும் பிற இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் இப்பேணியில் பங்கேற்றனா்.

கடந்த திங்கள்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, 71 வயதான வழக்குரைஞா் ஒருவா் தலைமை நீதிபதியை நோக்கி காலணியை வீச முயன்ாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, இந்திய பாா் கவுன்சிலால் அந்த வழக்குரைஞா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மனநிலை சரியில்லாத வால்மீகி, சமீபத்தில் தண்டேபூா் ஜமுனாபூரில் உள்ள தனது மாமியாா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, திருட்டுக்காக வீடுகளில் ட்ரோன்கள் மூலம் குறி வைக்கும் கும்பலைச் சோ்ந்தவராகக் குற்றம் சாட்டியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், அவா் இடுப்புப் பட்டை மற்றும் தடிகளால் தாக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com