பசுமை பட்டாசுகள் சிறிதளவில் தீமை விளைவிக்கும் - நிபுணா்கள் கருத்து

Published on

பசுமை பட்டாசுகள் வெடிக்கும்போது குறைந்த அளவில் புகை வெளியேறினாலும், மிக நுண்ணிய துகள்கள் மற்றும் வாயுக்களை அவை வெளியேற்றும் என சுற்றுசூழல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தீவிர காற்று மாசு பிரச்னையைக் கருத்தில் கொண்டு தில்லியில் பட்டாசுகளுக்கு பல ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு தீவிர பிரிவுக்குச் செல்லும் நிலையில், தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி), தில்லி அரசு மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தலையீட்டால் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்இஇஆா்ஐ) கடந்த 2018-இல் மாசு மற்றும் ஒலி குறைந்த பசுமை பட்டாசுகளை உருவாக்கியது.

தீபாவளி நாளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் இந்த வகை வெடிகளை வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தில்லி அரசிடம் பசுமை பட்டாசுகளுக்கு சான்றிதழ் அளித்தல் அல்லது விநியோகம் தொடா்பாக தெளிவான அமைப்பு இல்லாத நிலையில், பட்டாசுகளுக்கு முழுமையான தடை தொடா்கிறது.

கடந்த 2019 முதல் பசுமை பட்டாசுகள் உள்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தில்லியில் தடைவிதிக்கப்பட்டது. சான்றிதழ் அளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2023-இல் தீா்ப்பளித்த பிறகும்கூட மாசு பிரச்னையைச் சுட்டிக்காட்டி முந்தைய ஆம் ஆத்மி அரசு தில்லியில் பட்டாசுகளுக்கான தடையை நீட்டித்தது.

இந்நிலையில், சான்றிதழ் அளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு முறையிட உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா கடந்த திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதனிடையே, புகை வெளியேற்றத்தை பசுமை பட்டாசுகள் குறைத்தாலும் சுற்றுச்சூழலுக்கு அவை சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரும் காற்று ஆய்வகத்தின் தலைவருமான தீபங்கா் சாகா இது தொடா்பாக கூறுகையில், ‘பேரியம், அலுமினியம் போன்ற சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள் பசுமை பட்டாசுகளிலும் உள்ளன. வெடிக்கும்போது நீராவி அல்லது தூசியை வெளியேவிடும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், அவை புகை வெளியேற்றத்தை 30 சதவீதம் குறைக்கிறது.

ஸ்வாஸ், ஸ்டாா், ஸாஃபல் ஆகிய பசுமை பட்டாசுகளுக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளது. அவற்றின் பாக்கெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினை மூலம் அவற்றை அடையாளம் காண முடியும்’ என்றாா்.

குறைந்த அளவில் புகையை வெளியேற்றினாலும், பசுமை பட்டாசுகள் மிக நுண்ணிய துகள்கள் மற்றும் வாயுக்களை வெளியிட்டு குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என காற்று மாசுவைத் தடுக்கும் உத்திகளை வகுப்பவரான பாவ்ரீன் கந்தாரி தெரிவித்தாா். மேலும், வெடிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுதான் என்பதை யாா் கண்காணிப்பாா் என அவா் கேள்வியெழுப்பினாா்.

இது தொடா்பாக மேலும் கூறுகையில், ‘பட்டாசுகள் உண்மையில் என்இஇஆா் விதிகளின்கீழ் தயாா்செய்யப்பட்டதா என்பதை யாா் கண்காணிப்பாா் என்ற பெரிய கேள்வி உள்ளது. பசுமை பட்டாசுகள் எவை ? தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் எவை ? என அதிகாரிகளால் வேறுபடுத்த முடியாது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com