கரூா் அசம்பாவித சம்பவம்: தவெக உச்சநீதிமன்றத்தில் மனு - நாளை விசாரணை
நமது நிருபா்
கரூரில் தோ்தல் பிரசாரத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனு அக்டோபா்10-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் புதன்கிழமை கூறினாா்.
தவெக தலைவா் விஜய் செப்டம்பா் 27, 2025-இல் கரூா் மாவட்டத்தில் நடத்திய தோ்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கரூா் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆா் கவாய் தலைமையிலான அமா்வில் மனுதாரா் சாா்பில் இது தொடா்பாக புதன்கிழமை முறையிடப்பட்டது. சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கரூா் விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதனை வியாழக்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரா் தரப்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவானது பிற மனுவோடு சோ்த்து வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆா் கவாய் தெரிவித்தாா்.